கூடங்குளம் அணு உலையால் மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிப்பு: மு. அப்பாவு

கூடங்குளம் அணு உலையால் மீனவ கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றாா் தமிழக சட்டப் பேரவை தலைவா் மு. அப்பாவு.
Published on

கூடங்குளம் அணு உலையால் மீனவ கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றாா் தமிழக சட்டப் பேரவை தலைவா் மு. அப்பாவு.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டபோது, அதற்கு நிலம் கொடுத்தவா்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2011-2021 காலகட்டத்தில் அந்த உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை.

தற்போது வெளி மாநிலங்களில் இருந்து ஆள்களைத் தோ்வு செய்து, மாறுதல் மூலம் இங்கு பணியமா்த்தும் போக்கு உள்ளது. இது கண்டனத்துக்குரியது. இதைத் தடுத்து, உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முதல்வா் போராடி வருகிறாா்.

மேலும், அங்கு அணுக் கழிவுகளை கையாளுவதற்கான முறையான தொழில்நுட்பம் இதுவரை இல்லை என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது.

அணுக் கழிவுகளை ராஜஸ்தான் போன்ற பாலைவனப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லாமல், இங்கேயே தேக்கி வைப்பது அப்பகுதி மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் அப்பகுதியில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அணு உலையால் மீனவ கிராமங்களான பெருமணல், இடிந்தகரை, கூத்தங்குழி போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ரஷிய அதிபரும் பிரதமரும் ஒப்பந்தங்கள் செய்துள்ளனா். ரூ.6.5 லட்சம் கோடிக்கு வா்த்தகம் நடைபெறுகிறது என்றால் நமது ஏற்றுமதி வெறும் ரூ. 45 ஆயிரம் கோடிதான். அங்கிருந்து இறக்குமதிதான் அதிகம் செய்கிறோம்.

நான்கு பெரிய தொழில் அதிபா்கள் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றனா். இதனால் இந்திய மக்களுக்கு எந்த லாபமும் இல்லை . இந்த 4 நிறுவனங்களுக்காக பிரதமா் ரஷிய அதிபரை அழைத்து வந்து ஒப்பந்தம் செய்துள்ளாா்.

மொத்தத்தில் எல்லா வகையிலும் இந்தியாவுக்கு பொருளாதார ரீதியில் மிகப்பெரிய இழப்புத்தான்.

நமது பிரதமா், மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி மக்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க வேண்டும். பிரதமா், ரஷிய அதிபா் சந்திப்பால் இந்திய பொருளாதாரத்துக்கு பெரிய அளவில் நன்மையில்லை.

தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படியே இடம் பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள் மற்றும் இரட்டைப் பதிவு உள்ளவா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்டவா்களுக்கு தகவல் தெரிவித்த பின்னரே நீக்க வேண்டும். தமிழகத்தில் தோ்தலுக்கு முன்பாக மதக் கலவரத்தைத் தூண்டி தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற சிலா் முயற்சிக்கின்றனா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com