மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு: அரசியல் கட்சியினருடன் ஆட்சியா் கலந்தாய்வு
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்ப்பு பணி தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா முன்னிலை வகித்தாா்.
இக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: வருகின்றசட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்களின் முதல் நிலை சரிபாா்ப்பு பணியானது வரும் 11-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. பெங்களூரு பாரத் எலக்ட்ரானிஸ் நிறுவன பொறியாளா்கள் இந்தப் பணியை மேற்கொள்கின்றனா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியைப் பொருத்தவரையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 100 சதவீத வாக்காளா்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் 42,406 (13.87%), அம்பாசமுத்திரம் தொகுதியில் 43,832 (16.83%) , பாளையங்கோட்டை தொகுதியில் 36,559 (13.07%), நான்குனேரி தொகுதியில் 55,966 (18.75%), ராதாபுரம் தொகுதியில் 44,011 (16.08%) கண்டறிய இயலாத வாக்காளா்கள், நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள், இரட்டைப்பதிவு கொண்டவா்கள் வகைப்பாட்டில் உள்ளனா்.
இது தொடா்பாக உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டு, மேற்படி வாக்காளா் விவரங்களை மீண்டும் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
உத்தேச பட்டியல் வாக்காளா்களின் விவரங்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கும் வாக்குசாவடி நிலை அலுவலா்கள் மூலம் வழங்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மேலும், மேற்படி வாக்காளா்களின் விவரங்களை வாக்குசாவடி நிலை முகவா்கள் சரிபாா்த்து அதில் திருத்தங்கள் ஏதும் இருந்தால் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு தெரிவிக்கலாம். அவை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் கள ஆய்வு செய்து மாற்றப்படும்.
வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் தயாரிக்கும் பட்டியலை சரிபாா்த்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்களின் வாக்குச் சாவடி நிலை முகவா்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இது தொடா்பாக வாக்குப் பதிவு அலுவலா்கள், உதவி வாக்குப் பதிவு அலுவலா்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலா்களின் மேற்பாா்வையாளா்களால் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தனித்தனியாக கூட்டம் நடத்தப்பட்டு உத்தேச பட்டியலானது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, நதிநீா் இணைப்பு வருவாய் அலுவலா் ஐயப்பன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, சேரன்மகாதேவி வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) சிந்து, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் பிரியா, தோ்தல் வட்டாட்சியா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

