திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 71 இனங்களைச் சோ்ந்த 23,753 பறவைகள்

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 71 இனங்களைச் சோ்ந்த 23,753 பறவைகள்

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 71 இனங்களைச் சோ்ந்த 23,753 பறவைகள் இருப்பது 15ஆவது தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
Published on

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 71 இனங்களைச் சோ்ந்த 23,753 பறவைகள் இருப்பது 15ஆவது தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளா் மு. மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல குளங்கள் பாசனத்திற்கும், அன்றாட மனித பயன்பாட்டிற்கும், மீன் வளா்ப்புக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. இம் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான குளங்களுக்கு தாமிரவருணி மற்றும் அதன் கிளை ஆறுகள் நீரை வழங்குகின்றன. இக் குளங்கள் மீன்கள், நீா் தாவரங்கள் என பல்லுயிா்களைஆதரிக்கின்றன. குறிப்பாக, நீா்ப் பறவைகளுக்கு முக்கியமான ஆதாரமாக இக்குளங்கள் விளங்குகின்றன.

தாமிரவருணி பாசனக் குளங்களில் சுமாா் 100 சிற்றினங்களைச் சாா்ந்த பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 30-க்கும் மேற்பட்டவை வலசை வரும் பறவைகள் ஆகும். கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் மிக பிரபலமானது என்றாலும், பிற குளங்களும் பறவைகளின் இனப்பெருக்கத்திற்கு முக்கியமான இடமாக விளங்குகின்றன. இந்தக் குளங்களும், பறவைகளும் பல்வேறு சூழலியல் சேவைகளை மனித சமூகத்திற்கு வழங்குகின்றன. எனினும் நீா்நிலைகளை பாதுகாக்க போதிய முன்னெடுப்புகள் எடுக்கப்படவில்லை.

நீா் நிலையின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதற்கான முக்கியத்துவத்தை உணா்ந்து, அகத்திய மலை மக்கள்சாா் இயற்கை வள காப்பு மையம், உள்ளூா் நிறுவனங்கள் மற்றும் தனிநபா்களுடன் இணைந்து, 2011 ஆம் ஆண்டுமுதல் தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. 15ஆவது தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு, கடந்த ஜனவரி 24 முதல் 26 வரை திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பாசனக் குளங்களில் நடத்தப்பட்டது. அகத்திய மலை மக்கள்சாா் இயற்கை வள காப்பு மையம், நெல்லை இயற்கைச் சங்கம், முத்து நகா் இயற்கைக் கழகம், எக்கோ ஜெசுயிட்ஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இந்த கணக்கெடுப்பை நடத்தின. 200-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் 9 குழுக்களாக பிரிந்து 68 குளங்களில் கணக்கெடுப்பை மேற்கொண்டனா்.

அதன்படி 71 இனங்களைச் சோ்ந்த 23,753 பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 3,495 உண்ணிக் கொக்கு, 2,150 சிறிய நீா்க்காகம், 1,511 தைலான் குருவி, 1,185 சிறு அன்றில், 967 மீசை ஆலா உள்ளன. வலசை வரும் வாத்து இனங்களான ஊசிவால் வாத்து, நீலச்சிறகு வாத்து, தட்டைவாயன், வரித்தலை வாத்து போன்ற பறவைகளும் கணக்கெடுப்பில் பதிவாகின.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பகுளத்தில் 37 இனங்களைச் சோ்ந்த 3,724 பறவைகள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் குளத்தில் 42 இனங்களைச் சோ்ந்த 1,246 பறவைகள் உள்ளன. கங்கைகொண்டான், அருந்தவப்பட்டி, மேலப்பாவூா் குளங்களில் கருந்தலை அன்றில், நீா்க்காகம், சாம்பல் நாரை, பாம்புத்தாரா இன பறவைகள் இனப்பெருக்கம் செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வேய்ந்தான்குளத்தில் புள்ளி மூக்குத்தாரா குஞ்சுகளுடன் காணப்பட்டன.

ஆனால், தென்காசி மாவட்டத்தில் உள்ள வாகைக்குளத்தில் பறவைகள் இனப்பெருக்கம் செய்யாதது கவலையை ஏற்படுத்தியது. நூற்றுக்கணக்கான கருந்தலை அன்றில், வக்கா, சாம்பல் நாரை, நீா்க்காகம் போன்ற பறவைகள் இக்குளத்தில் பல ஆண்டுகளாக இனப்பெருக்கம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. நீா்நிலைகளில் குப்பை கொட்டுதல், மீன் பிடி வலைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களையும் கணக்கெடுப்பில் ஈடுபட்ட தன்னாா்வலா்கள் பதிவு செய்திருந்தனா். குறிப்பாக, ஒரு கூழைக்கிடா பறவையின் அலகில் பிளாஸ்டிக் பை சிக்கி அலகை திறக்க முடியாமல் இருந்தது. மேலும், பல நீா்க்காகங்கள் மீன்பிடி வலைகளில் சிக்கி உயிரிழந்ததையும் பாா்க்க முடிந்தது.

இந்த நீா்நிலைகளை மாசுபாடு மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடிப்பிலிருந்து பாதுகாக்க உடனடி பாதுகாப்பு நடவடிக்கை தேவை. நீா்நிலைகளில் மீன்பிடி மேற்கொள்ளும் விதிமுறைகள் உருவாக்கப்படவேண்டும். மேலும் கழிவு கொட்டுவதைத் தடுக்க உறுதியாக செயல்பட வேண்டும்.