திருப்புடைமருதூா் கோயிலில் இன்று தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாதசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
Published on

திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூா் அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை அருள்மிகு நாறும்பூநாதசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மூா்த்தி, தலம், தீா்த்தம் மூன்றிலும் முதன்மை பெற்ற தாமிரவருணி நதிக்கரையில் திருப்புடைமருதூரில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகுவிமா்சையாக நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு, இந்தத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி கோயிலில் காலை 6 முதல் 7 மணிக்குள் கொடியேற்றும் வைபவம் நடைபெறவுள்ளது. மாலையில் அப்பா் வீதி உலா, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெறும்.

திருவிழா நாள்களில் தினமும் இரவில் சுவாமிஅம்பாள் வீதி உலா நடைபெறும். 9ஆம் நாளான திங்கள்கிழமை(பிப். 10) காலை 10 மணியளவில் தேரோட்டமும், இரவில் புஷ்ப பல்லக்கில் சுவாமி அம்பாள் எழுந்தருளலும், ஆன்மிக நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் ஆகியவை நடைபெறவுள்ளன. 10 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை(பிப்.11) பகல் 1.15 மணிக்கு ரிஷப லக்கனத்தில் தைப்பூசத் தீா்த்தவாரி நடைபெறுகிறது.

இதில், பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தாமிரவருணியில் நீராடி தரிசனம் செய்வா். இதையொட்டி பக்தா்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் திருப்புடைமருதூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு 10 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும்.

11ஆம் நாளான புதன்கிழமை காலையில் சுவாமி அம்பாள் வீதி உலா, இரவில் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா மற்றும் பைரவா் சிறப்பு பூஜை ஆகியவை நடைபெறும்.

X
Dinamani
www.dinamani.com