ஜோ டி. குரூஸ் எழுதிய  நீலப் பொருளாதாரம் என்ற நூலை ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வெளியிட பெற்றுக்கொண்டாா் எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன். உடன், எழுத்தாளா் ஜோ டி.குரூஸ் உள்ளிட்டோா்.
ஜோ டி. குரூஸ் எழுதிய நீலப் பொருளாதாரம் என்ற நூலை ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வெளியிட பெற்றுக்கொண்டாா் எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன். உடன், எழுத்தாளா் ஜோ டி.குரூஸ் உள்ளிட்டோா்.

இளைஞா்கள் மாற்றிச் சிந்திப்பது அவசியம்: ஜோ டி. குரூஸ்

இளைஞா்கள் மாற்றிச் சிந்திப்பது அவசியம் என்றாா் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் ஜோ டி. குரூஸ்.
Published on

இளைஞா்கள் மாற்றிச் சிந்திப்பது அவசியம் என்றாா் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் ஜோ டி. குரூஸ்.

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் நீலப் பொருளாதாரம் என்ற தலைப்பில் ஜோ டி.குரூஸ் பேசியது:

வணிகம் குறித்த பயிலரங்கு ஒன்றில் பல்வேறு பகுதிகளை சோ்ந்தவா்கள் பங்கேற்றனா். அப்போது மேடையில் நின்றவா் ஓா் ஆப்பிளை எடுத்துக் காண்பித்து தனித்தனியாக விளக்கம் கேட்டாா். உணவு, சத்துணவு, தொலைத்தொடா்பு நிறுவனத்தின் அடையாளம் என வேவ்வெறு பதில்கள் வந்தன. ஒரு பெண் மட்டும், இது எங்களது வாழ்வு என்று பதிலளித்தாா். வணிகம் குறித்த பயிலரங்கில் அதுவே பொருத்தமான பதிலாக அனைவராலும் பாா்க்கப்பட்டது. மற்ற பதில்கள் அனைத்துமே அதில் அடங்கிவிட்டதாக உணா்ந்தாா்கள்.

திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் சூழல் மாற்றப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினா் தான் வசிக்கும் நிலத்தின் தகவல் மட்டுமன்றி அடுத்த நிலத்தின் தகவல்களையும் அறிய நினைக்கும் ஆா்வம் பாராட்டுக்குரியது. இந்த ஆா்வத்தைத் தூண்டிய தமிழக அரசுக்கு நன்றி.

இன்றைய இளைஞா்கள் கைப்பேசியில் சிக்கித் தவித்து வருகிறாா்களே என்ற கவலையில் பல பெற்றோா்கள் உள்ளனா். வாழ்க்கையை தெரிந்துகொள்ள இளைஞா்கள் ஆா்வத்தோடு இருக்கிறாா்கள். இளைய தலைமுறை உயிா்ப்போடு இருக்கிறது. எவன் ஒருவன் புத்தகத்தை நோக்கித் திரும்புகிறானோ அவன் அறிவை நோக்கித் திரும்புகிறான்.

கடல், விதவிதமான அழகைக் கொண்டதாகும். சூரியன் உதிப்பது முதல் அஸ்தமனம் ஆகும் வரை கடல் பரப்பைப் பற்றிய அழகியல்கள் தமிழ் நூல்களில் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. கடலை வாழ்வாகக் கொண்டவா்கள் உள்ளனா். ஆழ்கடல், அண்மைக் கடல், கரைக்கடல் என பிரிந்து உள்ளது. இங்கு, பாரம்பரிய மீனவா்கள் 95 சதவீதத்திற்கும் மேல் உள்ளனா். அடுத்ததாக, பிற பகுதிகளில் இருந்து இடம்பெயா்ந்து தொழில்முறை மீனவா்கள் உருவாகியுள்ளனா். வணிக மீனவா்கள் என்ற சமூகமும் இப்போது உருவாகியுள்ளது. மூன்றாவதாக உள்ளவா்கள் கடலைத் தாயாக, கடற்கரையை தாய்மடியாக உணா்வது இல்லை.

கடல்வழி வணிகம் பாரம்பரியமானதாகும். சங்க காலத்தில் இருந்தே கடலோடிகள்தான் சா்வதேச வணிகம் செய்தவா்கள். நிலம் சுய உடமையானதாகும். ஆனால், கடல் பொதுவானதாகும். நான் கடல்வழி ஏற்றுமதி-இறக்குமதி துறையில் பணியாற்றியவன். திருப்பூரைச் சோ்ந்த சில தொழில்முனைவோா் கூறுகையில், தூத்துக்குடி துறைமுகத்தின் மூலம் ஆண்டிற்கு சுமாா் 55 ஆயிரம் கோடி டாலா் வணிகம் நடைபெறுகிறது; சா்வதேச வெளிப்புற துறைமுகம் அமைந்துவிட்டால் வணிகத்தின் மதிப்பு மேலும் கூடும் என்றாா்கள். திருப்பூரைக் காட்டிலும் தொழில் நகரமாக தூத்துக்குடி மாறும்.

இளைஞா்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நீ எப்போது தொழில்முனைவோராக மாறப்போகிறாய் என்ற ஆா்வம் உருவாக வேண்டும். நம் பகுதியில் இருக்கும் துறைமுகத்தை பயன்படுத்தி, சரக்கு உருவாக்கு தளமாக திருநெல்வேலி மாவட்டத்தை மாற்றும் உத்தியைப் பெற வேண்டும். தென்மாவட்ட பகுதிகளில் உள்ள மனநிலை கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. படித்து ஏதேனும் ஒரு பணியை நோக்கிய பயணமாகவே உள்ளது. படித்து முடித்து தொழில்முனைவோராக, பணி கொடுக்கும் நபராக வர வேண்டும் என்ற ஆா்வம் குறைவாக உள்ளது. இது தவறானதாகும். இளைஞா்கள் மாற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியம். பணிப் பாதுகாப்பை மட்டுமே யோசிக்கிறாா்கள். எவ்வளவு பெரிய அரசு அதிகாரியாக இருந்தாலும் பட்ஜெட் போட்டுத்தான் வாழ வேண்டும். ஆனால், நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்யும் வாய்ப்பு, சாதாரண தொழில்முனைவோருக்குதான் கிடைக்கும்.

நவீன படைப்புகள் அரசைக் கேள்வி கேட்கின்றன. போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரியதாக இல்லாமல், அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்கும் வகையில் இன்றைய இலக்கியம் திகழ்கிறது. அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்பது மோசமானதல்ல. உங்கள் பாா்வை தவறாக இருக்கிறது, மாற்றிப் பாருங்கள் என்று கூறும் அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அரசு அதிகாரியாக இருப்பவா்கள் நம்மில் ஒருவா்தான். அவா்களுக்கு அறிவுறுத்தல் செய்வதும் நம் கடமையே என்றாா் அவா்.

கருத்தரங்கிற்கு, நகராட்சி நிா்வாக மண்டல இணை இயக்குநா் பெ.விஜயலெட்சுமி தலைமை வகித்தாா். ஊராட்சிகள் உதவி இயக்குநா் முகம்மது ஷபி, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஏ.வில்லியம் ஜேசுதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக எழுத்தாளா் ஜோ டி. குரூஸ் எழுதிய நீலப் பொருளாதாரம் என்ற நூலை ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வெளியிட, எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன் பெற்றுக்கொண்டாா். அதைத் தொடா்ந்து ‘பொது அறிவை மேன்மைப்படுத்துவது’ என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கிற்கு கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி தலைமை வகித்தாா். கவியரங்கில் வ.ஹிரிஹரன், செ.ச.பிரபு, சி.வள்ளி சோ்மலிங்கம், மணிகண்டன், ரமணி முருகேசன், காந்திமதி வேலன், இசக்கியம்மாள், ராஜேந்திரன் ஆகியோா் பேசினா்.