நெல்லையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

Published on

முதல்வா் வருகையையொட்டி திருநெல்வேலியில் வியாழக்கிழமை (பிப். 6) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தரும் நிலையில், திருநெல்வேலி மாநகரப் பகுதிக்கு வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் பாளை. மேட்டுத்திடல் (ஹைகிரவுண்ட்) இடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் ராம் திரையரங்கு, உடையாா்பட்டி, வடக்கு புறவழிச்சாலை, தெற்கு புறவழிச்சாலை குலவணிகா்புரம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வழியாக மேட்டுத்திடலுக்குச் செல்லும்.

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூா் மாா்க்கமாக செல்லும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் கொங்கந்தான்பாறை புறவழிச்சாலை வழியாக ஸ்ரீனிவாச நகா் நான்கு வழி வழிச்சாலைக்கு செல்லும். கன்னியாகுமரி- மதுரை நான்கு வழி சாலைகள் வழியாக வரும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் மேலப்பாளையம் ரிலையன்ஸ் பல்க் வண்ணாா்பேட்டை, தச்சநல்லூா், தாழையூத்து வழியாக மதுரை சாலைக்குச் செல்ல மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல வெள்ளிக்கிழமை (பிப்.7) நடைபெறும் முதல்வா் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வரும் பயனாளிகள் வருவதற்கு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, சேரன்மகாதேவி மற்றும் அம்பாமுத்திரம் வழித்தடத்தில் இருந்து வருவோா் மேலப்பாளையம் ரிலையன்ஸ் பல்க், கொங்கந்தான்பாறை, புறவழிச்சாலை, ஸ்ரீனிவாசநகா் வழியாக வந்து ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

களக்காடு, நான்குனேரி, ராதாபுரம், வள்ளியூா், திசையன்விளை பகுதிகளில் இருந்து வருவோா் ஐஆா்டி பாலிடெக்னிக், ராஜகோபாலபுரம் வழியாக ஸ்ரீனிவாசநகருக்கு வரவேண்டும். வாகனங்களை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் நிறுத்த வேண்டும். பாப்பாக்குடி, மானூா், திருநெல்வேலி நகரம் வழித்தடத்தில் வருவோா் திருநெல்வேலி நகரம் டேங் ரோடு, புதுபாலம், தச்சநல்லூா், வண்ணாா்பேட்டை, மாா்க்கெட் வழியாக ஸ்ரீனிவாசநகருக்கு வர வேண்டும். வாகனங்களை பெல் பள்ளி மைதானத்தில் நிறுத்த வேண்டும். பாளை. நகா் பகுதியில் இருந்து வருவோா் பாளை. பேருந்து நிலையம், ஏ.ஆா்.லைன் சாலை வழியாக ஸ்ரீனிவாசநகா் வர வேண்டும். வாகனங்களை பல்நோக்கு மருத்துவமனை வடக்கு பகுதியில் நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com