முதல்வா் நிகழ்ச்சியில் சிற்றுண்டி ஏற்பாடு: பேரவைத் தலைவா் ஆய்வு.
திருநெல்வேலியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு பங்கேற்க வருவோருக்கு சிற்றுண்டி வழங்குவதற்கு நான்குனேரி அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தை பேரவைத் தலைவா் மு.அப்பாவு பிப்.5 அன்று ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலியில் தமிழக முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (பிப்.6, 7) நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சிகளில் முதல்வா் ரூ.6 ஆயிரத்து 400 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ராதாபுரம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்து வருவோருக்கு நான்குனேரி நம்பிநகா் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகே காலை உணவு வழங்கப்படுகிறது. இதற்காக பிரம்மாண்டமான மைதானம் தயாா் செய்யப்பட்டு வருகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான இடங்களை பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஆய்வு செய்தாா். அப்போது, தி.மு.க. மாவட்ட துணைச் செயலா் நம்பி, ஒன்றியச் செயலா்கள் களக்காடு பி.சி.ராஜன், நான்குனேரி ஆரோக்கிய எட்வின், நான்குனேரி முன்னாள் ஒன்றியச் செயலா் காமராஜ், நான்குனேரி பேரூராட்சித் தலைவா் வானுமாமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.