பாளை.யில் பெண் கொலை வழக்கு: ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள்
பாளையங்கோட்டையில் ஆசிட் ஊற்றி பெண்ணை கொலை செய்த வழக்கில், ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சீவலப்பேரியைச் சோ்ந்தவா் ஞானதுரை (எ) சின்னராசு, வேன் ஓட்டுநா். இவருக்கு திருமணமான நிலையில், விவகாரத்து பெற்றிருந்தாா். இந்நிலையில் வண்ணாா்பேட்டையில் உள்ள சின்னராசுவின் சகோதரி வீட்டில் முகேஷ் என்பவா் தனது மனைவி ராமலெட்சுமியுடன் வாடகைக்கு குடியிருந்து வந்தாா். சின்னராசு கைப்பேசி மூலம் ராமலெட்சுமியிடம் தொடா்பு கொண்டு பாலியல் தொந்தரவு செய்து வந்தாராம்.
இதனிடையே, கடந்த 2016, நவ. 11 ஆம் தேதி பணிக்குச் சென்ற ராமலெட்சுமியை தாக்கி, அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சிங்கிகுளம்- வடுவூா்பட்டி செல்லும் சாலையில் வைத்து பாலியல் தொந்தரவு செய்து, அவரிடமிருந்த 2.5 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு, அவா் மீது ஆசிட் ஊற்றியுள்ளாா். இதில், காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனா். இதில், 2017 ஜூன் 2 ஆம் தேதி ராமலெட்சுமி உயிரிழந்தாா்.
இந்த வழக்கு திருநெல்வேலி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) பன்னீா்செல்வம், வேன் ஓட்டுநா் சின்னராசுவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.