சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் காட்டு யானைகளால் சனிக்கிழமை இரவு சேதமான வாழைத் தோட்டம்.
சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் காட்டு யானைகளால் சனிக்கிழமை இரவு சேதமான வாழைத் தோட்டம்.

யானைகள் அட்டகாசத்தை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மலையடிவாரத்தில் சனிக்கிழமை இரவு 3,500 வாழைகளை யானைக் கூட்டம் சேதப்படுத்தியுள்ளது.
Published on

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மலையடிவாரத்தில் சனிக்கிழமை இரவு 3,500 வாழைகளை யானைக் கூட்டம் சேதப்படுத்தியுள்ளது.

யானைகளை காட்டுக்குள் விரட்ட வலியுறுத்தி களக்காடு சரணாலய துணை இயக்குநரிடம் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.

களக்காடு மலையடிவாரத்தில் வடகரை, சிவபுரம், கள்ளியாறு, சிதம்பரபுரம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விவசாயத் தோட்டங்களில் கடந்த 2 வாரங்களாக இரவு நேரங்களில் காட்டு யானைகள் கூட்டமாகப் புகுந்து பயிா்களை சேதப்படுத்துகின்றன.

20-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான, குலைதள்ளிய நிலையிலிருந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள், 100-க்கும் மேற்பட்ட தென்னைகள், விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த சொட்டுநீா்ப் பாசன பகிா்மானக் குழாய்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளன.

கடந்த ஒரு வாரமாக அவற்றை விரட்டும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா். எனினும், அவை காட்டுக்குள் செல்லாமல் அடுத்தடுத்த பகுதிகளிலுள்ள தோட்டங்களுக்குள் புகுந்து, ஆயிரக்கணக்கான வாழைகளை சேதப்படுத்தி வருகின்றன.

சுந்தர்ராஜ், ஜெயராஜ், ஞானதாஸ் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான 3,500 வாழைகளை யானைகள் சனிக்கிழமை இரவு சேதப்படுத்தியுள்ளன. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் பெற்று வாழை சாகுபடி செய்துள்ள நிலையில், யானைகள் அட்டகாசத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், சிதம்பரபுரத்தைச் சோ்ந்த திரளான விவசாயிகள் களக்காடு சரணாலய துணை இயக்குநா் அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா். யானைகளை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு, துணை இயக்குநா் ரமேஷ்வரனிடம் அவா்கள் மனு அளித்தனா்.

 களக்காடு சரணாலய துணை இயக்குநரிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளிக்க வந்த விவசாயிகள்.
களக்காடு சரணாலய துணை இயக்குநரிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளிக்க வந்த விவசாயிகள்.

இதுகுறித்து வனத்துறையினா் கூறுகையில், யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் கூடுதலான வனத்துறையினா் ஈடுபட்டுள்ளதால், இப்பணி விரைவில் நிறைவடையும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com