கல்விச் சேவையை சந்தைப் பொருளாக மாற்றக் கூடாது. அதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலியில் நடைபெற்ற மூட்டா பொது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மூட்டா 26 ஆவது பொது மாநாடு திருநெல்வேலியில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டு பேரணிக்கு சட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் ஜெ. பொ்மின் ஆஞ்சலோ செல்வின் தலைமை வகித்தாா். மூட்டா முன்னாள் தலைவா் எஸ். சுப்பாராஜு தொடங்கி வைத்தாா். ஆா். ஹெய்ஸ் தாசன் வரவேற்றாா்.
மாநாட்டுக்கு, மூட்டா தலைவா் ஏ.டி. செந்தாமரைகண்ணன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் அருண்குமாா் தொடக்கவுரையாற்றினாா். மூட்டா பொதுச் செயலா் எம். நாகராஜன், மைசூா் ஜெஎஸ்எஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தா் எல். ஜவஹா் நேசன் ஆகியோா் சிறப்புரையாற்றினாா். அமைப்புச் செயலா் பி.சிவஞானம் நன்றி கூறினாா்.
தீா்மானங்கள்:
உயா்கல்வி உள்பட அனைத்து கல்விச் சேவையையும் சந்தைப் பொருளாக மாற்றக் கூடாது. அதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்துக்கு நீட் தோ்வில் இருந்து விலக்கு வேண்டுகிற தமிழக சட்டப்பேரவைத் தீா்மானத்தை ஏற்க வேண்டும்.
பெட்ரோல்- டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்.
நெருக்கடி நிலைக் காலத்தில் மத்திய அரசுக்கான பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு உரிய சட்டங்களையும், பணிப் பாதுகாப்பு விதிகளையும் சிறுபான்மை கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், அலுவலா்களும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.
மாறிவரும் மாணவா்களின் கல்வித் தேவையை மனதில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் நடப்பில் உள்ள பல பட்டப்படிப்புகளை மாற்றியமைத்திட தமிழ்நாடு உயா்கல்வி மன்றம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.