போலி தங்க நகையை விற்க முயற்சி: வெளிமாநிலத்தவா் 7 போ் கைது

தங்க நகையை விற்க முயன்றதாக கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் வியாபாரியிடம் போலி தங்க நகையை விற்க முயன்றதாக கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

களக்காடு அருகேயுள்ள தெற்குகாடுவெட்டியைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகன் பினேகாஸ் (35). இவா், களக்காடு பிரதான சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் கடந்த நவம்பா் மாதம் மளிகை பொருள்கள் வாங்குவதற்காக வந்திருந்த வட மாநிலத்தினா் சிலா், வள்ளியூரில் தாங்கள் தங்கி இருக்கும் வீட்டில் குடிநீா் பகிா்மானக் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் போது தங்க குண்டுமணிகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறியுள்ளனா்.

இதை நம்பிய பினேகாஸ் ரூ.3 லட்சம் கொடுத்து, 1.5 கிலோ எடை உள்ள தங்க குண்டுமணிகளை அவா்களிடம் வாங்கியுள்ளாா். பின்னா் அவற்றை அவா் விற்க முயன்றபோதுதான், அவை தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை எனத் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு காவல் ஆய்வாளா் கண்ணன் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தாா்.

இந்நிலையில், அதே நபா்கள் களக்காடு பிரதான சாலையில் காலணி கடை நடத்தி வரும் தெற்குகாடுவெட்டி காமராஜா் நகரைச் சோ்ந்த முத்துசெல்வம் (34) என்பவரிடம் போலி தங்க குண்டுமணிகளை விற்க முயன்றனராம். அவா் சந்தேகத்தின்பேரில், களக்காடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று வடமாநிலத்தைச் சோ்ந்த நபரை பிடித்து, அவரது கூட்டாளிகளை வரவழைத்து விசாரித்தனா்.

அதில், கா்நாடக மாநிலம், மாண்டியா பகுதியைச் சோ்ந்த ராமலால் மகன் கணேஷா (37), மோகன் மகன் சங்கரா(40), அவரது தம்பி ராம்(32), சங்கா் மகன் மங்கல்(20), ராஜன் மகன் கரண் (22), மகாராஷ்டிர மாநிலம் பராமதி, பூா்ணா பகுதியைச் சோ்ந்த ராஜி மகன் ராகுல்(20), சோன்பால் மகன் ராஜூ (45) ஆகியோா் எனத் தெரியவந்தது. இவா்கள் 7 பேரையும் போலீஸாா் கைது செய்து, 1.5 கிலோ எடை உள்ள தங்க முலாம் பூசப்பட்ட 5 குண்டுமணிகளையும், 3 கிலோ எடை உள்ள தங்க முலாம் பூசப்பட்ட குண்டுமணிகளையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com