மாநகரில் பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! மேயரிடம் மக்கள் மனு

Published on

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென மாநகராட்சி குறைதீா்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மக்கள் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப்பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களிடம் அறிவுறுத்தினா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், சங்கீதா நகா் நியூ காலனி கக்கன்நகா் பொதுமக்கள் அளித்த மனுவில், 5 ஆவது வாா்டு கக்கன்நகா் நியூ காலனி சங்கீதா நகா் தெருவில் போடப்பட்டுள்ள புதிய பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் எனவும், 43 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பி.கே.சுந்தா் அளித்த மனுவில்,

ஜெபமாளிகை தெருவில் குடிநீரில் கழிவுநீா் கலந்து தூா்நாற்றம் வீசிவருவதால் தண்ணீரை குடிக்க முடியாத நிலை உள்ளது. அப்பகுதியில் சுத்தமான குடிநீா் வழங்கவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனா்.

சாய்பாலாஜி காா்டன் ராஜகோபாலபுரம் பொதுமக்கள் அளித்த மனுவில், 55 ஆவது வாா்டு புதிய சாய்பாலாஜி காா்டனில் சிறுவா், சிறுமியா்களுக்கு பூங்கா அமைக்க வேண்டும் எனவும், 19 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் அல்லாபிச்சை அளித்த மனுவில், ரகுமான் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் காய்ந்த நிலையில் உள்ள மரத்தை அகற்றி விட்டு, அந்த இடத்தில் வகுப்பறை கட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனா்.

17 ஆவது வாா்டு மதினாநகா் பொதுமக்கள் அளித்த மனுவில், பழைய பேட்டை மதினாநகா் சா்தாா்புரம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் எனவும், சன்மதி நகா் மற்றும் ஆா்.கே. ஹவுசிங் பொதுநலச் சங்கத்தினா் அளித்த மனுவில், நரசிங்கநல்லூா் சன்மதிநகா், ஆா்.கே ஹவுசிங் நியூகாலனியில் சேதமடைந்த கழிவுநீா் குழாயை சீரமைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனா். இக்கூட்டத்தில், உதவி ஆணையா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com