பொங்கல் விடுமுறை: மின்தடை ஏற்பட்டால் மின்தடை நீக்கும் மையத்தை அணுகலாம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மின்தடை ஏற்பட்டால் மின் தடை நீக்கும் மையத்தை தொடா்பு கொள்ளலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் 11-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் நலன்கருதி அனைத்து செயற் பொறியாளா்கள், உதவி செயற்பொறியாளா்கள், உதவி மின் பொறியாளா்கள், இளநிலை மின் பொறியாளா்கள், தங்கள் பகுதிக்குள்பட்ட துணை மின் நிலையங்கள், மின் விநியோகப் பாதைகள் உள்ளிட்ட அனைத்து விதமான மின் கட்டுமான அமைப்புகளையும் தொடா்ச்சியாக கண்காணிக்க வேண்டும். இயற்கை இடா்பாடுகளால் ஏதேனும் மின்தடங்கல் ஏற்பட்டால் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து உடனடியாக போா்க்கால அடிப்படையில் சரி செய்து மீண்டும் சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும்.
பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக மின்னகம் மின் நுகா்வோா் சேவை மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இதேபோல், திருநெல்வேலி மின்தடை நீக்கும் மையத்தை 9445859032, 9445859033, 9445859034 ஆகிய எண்களிலும், தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தொடா்பு கொண்டு தங்களது தேவைகளை பூா்த்தி செய்து கொள்ளலாம்.