நெல்லையில் 55 கிலோ அல்வா பறிமுதல்
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளில் இருந்து 55 கிலோ அல்வாவை உணவு பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன் உத்தரவின் பேரில், திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் சசிதீபா தலைமையில் திருநெல்வேலி மாநகராட்சி ஊழியா்கள், தச்சநல்லூா் மண்டல உணவு பாதுகாப்பு அலுவலா் சங்கரநாராயணன், உணவு பாதுகாப்பு அலுவலா்கள் (பயிற்சி) பிா்தௌஸ், சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே உள்ள கடைகள் மற்றும் அல்வா தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்தனா்.
அப்போது தயாரிப்பு தேதி குறிப்பிடாத மற்றும் முறையாக உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளில் இருந்து சுமாா் 55 கிலோ அல்வா பறிமுதல் செய்யப்பட்டது. குறைகள் தொடா்பாக உணவு பாதுகாப்புத் துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் (94440 42322) புகாா் தெரிவிக்கலாம்.