18 நாள்களுக்குப் பின்னா் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி கோயிலுக்குச் செல்ல அனுமதி
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்வதற்கு வனத்துறையினா் 18 நாள்களுக்கு பின்னா் சனிக்கிழமை (நவ. 1) அனுமதியளித்தனா்.
மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடா்மழையால், திருக்குறுங்குடி நம்பியாறு, களக்காடு பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால், தலையணையில் தடுப்பணையைத் தாண்டி வெள்ளம் ஆா்ப்பரித்துப் பாய்ந்தது.
கடந்த அக். 12ஆம் தேதி நம்பி கோயில் செல்லும் வழியில் நம்பியாறு தரைப்பாலத்தைத் தாண்டி மறுகரையில் குளித்துக் கொண்டிருந்த 15 போ், மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து திடீரென ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததால் சிக்கிக்கொண்டனா். அவா்களை நான்குனேரி தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறையினா் மீட்டனா். அதையடுத்து, நம்பி கோயிலுக்குச் செல்வதற்கு அக். 13ஆம் தேதிமுதல் தடை விதிக்கப்பட்டது.
இதேபோல, அதிக நீா்வரத்து காரணமாக பச்சையாற்றில் தலையணை பகுதியில் அக். 14ஆம் தேதிமுதல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த ஒரு வாரமாக மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து நம்பியாறு, பச்சையாற்றில் நீா்வரத்து குறைந்துள்ளது.
இதனால், வனத் துறையினா் 18 நாள்களுக்கு பிறகு சனிக்கிழமை தடையை விலக்கிக்கொண்டனா். அதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

