கேடிசி நகரில் புதிய சாலைக்கு முதல்வா் பெயா்; கீழநத்தம் கிராம சபை கூட்டத்தில் தீா்மானம்
கேடிசி நகா் 7-ஆவது பிரதான சாலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலினின் பெயரைச் சூட்டுவது என கீழநத்தம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கீழநத்தம் ஊராட்சி வடக்கூரில் கிராம சபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் அனுராதா ரவிமுருகன் தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் சண்முகம் சதீஷ் ஊராட்சி வரவு செலவுகளை தாக்கல் செய்தாா்.
தொடா்ந்து கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டிய நடவடிக்கை, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், கேடிசி நகா் 7ஆவது பிரதான சாலை அமைப்பதற்கு முதல்வா் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்தச் சாலைக்கு மு.க.ஸ்டாலினின் பெயரைச் சூட்டுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வடக்கூரில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணனுக்கு நன்றி தெரிவித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
