சுடச்சுட

  

  குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சித்த மருத்துவப் பிரிவுக் கட்டடத்தை அமைச்சர் கே.டி. பச்சைமால் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

  பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அமைந்துள்ள இக்கட்டடத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது,

   கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய மருத்துவப் பிரிவுகளில் ஒன்றான சித்தா மருத்துவப் பிரிவு 53 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இவை பூவங்கோடு, திங்கள்நகர், சுசீந்திரம் ஆகிய இடங்களில் தனியாகவும், பிற அனைத்து அரசு மருத்துவமனைகளில் இணைந்தும் செயல்பட்டு வருகிறது.

  மேலும் கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் பத்மநாபுரம் அரசு தலைமை மருத்துவமனைகளில் உள்நோயாளிப் பிரிவும் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவப் பிரிவுகளில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வரும் சித்தா பிரிவில் நாள்தோறும் 50 முதல் 80 நோயாளிகள் வரை சிகிச்சைப் பெற்று செல்கில்கின்றனர். இப்பகுதி மக்களின் நலன்கருதி தேசிய ஊரக நலக்குழுமம் மூலம் 1200 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் மருந்தகம், மருத்துவர் அறை, நோயாளிகள் காத்திருக்கும் அறை, தசை பயிற்சி அறை மற்றும் மருந்து கிடங்கு உள்ளிட்ட வசதிகள் உள்ளன என்றார்.

  நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் வெங்கட்ராமன், சித்தா மருத்துவப் பிரிவு ஆலோசகர் சுதந்திர நாராயணன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மதுசூதனன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கார்த்திக், பேச்சிப்பாறை ஊராட்சித் தலைவர் எஸ். ராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தாணுபிள்ளை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் த. ஹரிராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai