சுடச்சுட

  

  நோய்த் தாக்குதலால் ரப்பர் மரங்களில் உதிரும் பச்சை இலைகள்

  By குலசேகரம்,  |   Published on : 13th August 2013 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் பூஞ்சான் தாக்குதலால் இயல்புக்கு மாறாக பச்சை இலைகள் உதிர்ந்து வருகின்றன. இதனால் 30 சதம் வரை ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

  குமரி மாவட்டத்தில் முக்கிய உற்பத்திப் பொருளாக ரப்பர் உள்ளது. இதற்காக மாவட்டத்தில் அரசு ரப்பர் தோட்டம் உள்பட  சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில்  ரப்பர்  மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.

  நிகழாண்டில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவில் ஜூலை மாதம் முதல் ரப்பர் மரங்களிலிருந்து இயல்புக்கு மாறாக தொடர்ந்து பச்சை இலைகள் உதிர்ந்து வருகின்றன. இலைகள் உதிர்வதால் ரப்பர் மரங்களில் இலை அடர்த்தி வெகுவாகக் குறைந்துள்ளது.

  இதனால் ரப்பர் பால் உற்பத்தி 15 சதம் முதல் 30 சதம் வரை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரப்பர் உற்பத்தி குறைவால் ரப்பர் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

  இதுகுறித்து குமரி மாவட்ட சிறு ரப்பர் தோட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் ஜி.கே. நம்பூதிரி கூறியதாவது:

  ஆண்டுதோறும் டிசம்பரில் மரங்களில் குளிர்கால இலையுதிர்வு ஏற்படும், அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் புதிய இலைகள் துளிர்க்கும். இக்காலத்தில் பனியின் தாக்கத்தால் ஓயிடியம் பூஞ்சான் ஏற்பட்டு இலை சுருண்டு விழும். இதற்காக கந்தகப் பொடிகள் இலைகளில் தூவ வேண்டும். இதனால் இலைகள் ஆரோக்கியமாக வளரும். நிகழாண்டில் பெரும்பாலான ரப்பர் தோட்டங்களில் கந்தகப் பொடி தூவப்பட்டது. இதையடுத்து இலைகள் அடர்த்தியாக செழித்து வளர்ந்தது. இந்நிலையில் அதிக பால் உற்பத்தி கிடைக்கும் என ரப்பர் விவசாயிகள் கருதி வந்தனர். ஆனால் அதற்கு மாறாக தற்போது நன்கு வளர்ந்த பச்சை இலைகள் உதிர்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இலைகள் உதிர்வதைத் தடுத்து நிறுத்த ரப்பர் வாரியம் விவசாயிகளுக்கு தக்க ஆலோசனை வழங்க வேண்டும் என்றார்.

  இதுகுறித்து ரப்பர் வாரிய வளர்ச்சி அலுவலர் மோகன்குமார் கூறியதாவது:

  குமரி மாவட்டத்தில் நிகழாண்டில் கடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக ரப்பர் மரங்களில் பைட்டோ தோரா என்ற பூஞ்சான் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இயல்பாக இந்தப் பூஞ்சான் ரப்பர் மரங்களில் காணப்படும்.  தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்தப் பூஞ்சான் தாக்குதலால், இலைகளின் காம்புகள் அழுகி இலைகள் வேகமாக உதிர்கின்றன.

  இந்தப் பூஞ்சான் தாக்குதல் குமரி மாவட்டத்தில் ஆர்.ஆர்.ஐ.ஐ. 600 என்ற இன ரப்பர் மரங்களில் அதிகமாகவும், பி.வி. 86, ஆர்.ஆர்.ஐ.ஐ. 105 ஆகிய இனங்களில் குறைவாகவும் காணப்படுகிறது.

  குறிப்பாக கேரள எல்லைப் பகுதியை ஒட்டிய ஆறுகாணி, ஆலஞ்சோலை, நெட்டா, மாங்கோடு, பனச்சமூடு, களியல் உள்ளிட்ட இடங்களில் அதிகமாவும், குலசேகரம், அருமனை, சுருளகோடு, கீரிப்பாறை ஆகிய இடங்களில்  குறைவாகவும் உள்ளது.

  பூஞ்சான் தாக்குதல் அதிகமாக உள்ள தோட்டங்களில் 30 சதம் வரை பால் உற்பத்தி இதனால் பாதிக்கப்படக்கூடும்.

  மழைக் காலத்துக்கு முன்பு இலைகள் முதிர்ந்த நிற்கும் பருவத்தில் போர்ட்டோ கலவை அல்லது எண்ணெய்யில் கலக்கிய காப்பர் ஆக்சி குளோரைடு இலைகளில் தெளிக்க வேண்டும். தற்போதுள்ள நிலையில் இந்தக் தெளிப்பான்கள் தெளித்து அதிக பலன் கிடைக்கப்போவதில்லை என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai