சுடச்சுட

  

  காங்கிரஸ் ஆட்சியில் வீழ்ச்சிப் பாதையில் பொருளாதாரம்: எச். ராஜா

  By dn  |   Published on : 21st August 2013 12:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் ஊழல் மலிந்த ஆட்சி காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது என்று பாஜக மாநில துணைத் தலைவர் எச். ராஜா குற்றஞ்சாட்டினார்.

  குலசேகரம் அருகே திருநந்திக்கரையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு, பாஜக கிளை தலைவர்கள் அறிமுகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைக் கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

  இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தனது செல்வாக்கை முற்றிலும் இழந்து வருகிறது.  இந்திய தத்துவம் என்பது தர்மத்தின் அடிப்படையிலான தத்துவமாகும். அதுவே பாஜகவின் கொள்கையாகவும் உள்ளது.

  காங்கிரஸ் கூட்டணி அரசு நாட்டை சீரழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறது.  இக்கூட்டணியின் மோசமான பொருளாதார நடவடிக்கை காரணமாக ரூபாயின் மதிப்பு சரிந்து இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

  நிதியமைச்சர் சிதம்பரம், தங்கம் வாங்க வேண்டாம் என்று கூறுகிறார். தங்கம் என்பது வெறும் ஆடம்பரப் பொருள் மட்டுமல்ல. இந்தியருக்கு தங்கம் என்பது பாதுகாப்பு மற்றும் சேமிப்பாகும்.

  நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு மெத்தனப்போக்கை  கடைப்பிடித்து வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறல்களை சரியான விதத்தில் கண்டிக்க இந்த அரசுக்கு துணிச்சலில்லை. பாஜக ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற அத்துமீறல்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளோம் என்றார்.

  நிகழ்ச்சியில் பாஜக திற்பரப்பு பேரூர் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.

  மாவட்டத் தலைவர் சி. தர்மராஜ், ஒன்றியத் தலைவர் வினோத்குமார், பேரூராட்சித் தலைவர்கள் ராதா, புஷ்பரதி, பிரசன்னகுமாரி, கட்சி நிர்வாகிகள் சுஜித்குமார், பொன். ராஜமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai