சுடச்சுட

  

  குமரி மாவட்டத்தில் நான்குவழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தும்போது உரிமையாளர்களுக்கு போதிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இம்மாதம் 24-ல் தர்னா நடைபெறும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

  இதுகுறித்து அக்கட்சியின் குமரி மாவட்டச் செயலர் என். முருகேசன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: குமரி மாவட்டத்தில் நான்குவழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கேரள மாநில எல்லையான காரோடியிலிருந்து செங்கவிளை, பிராக்கோடு, வயலன்கரை, பொன்னப்பநகர், வாறுதட்டு, அதங்கோடு, விளாத்துறை, கொல்லஞ்சி, நட்டாலம், பள்ளியாடி, கோடியூர், புங்கறை, மைலோடு, ஆழ்வார்கோவில், அப்பட்டுவிளை, மாடத்தட்டுவிளை, கொன்னகுழிவிளை, தோட்டியோடு, சுங்கான்கடை, கள்ளியங்காடு, புத்தேரி உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்படும்.

  இம்மாவட்ட மக்கள் தங்களுக்கான 5 சென்ட், 10 சென்ட் நிலங்களை வீட்டுமனைகளாக பயன்படுத்தி வருகின்றனர். நிலத்தின் சந்தைவிலை பலமடங்கு உயர்ந்து உள்ளது. இக்குடும்பங்கள் நிலங்களை இழந்தால் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

  எனவே பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாக்க நிலம் கையகப்படுத்தும் கிராமங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய விலை நிர்ணயக் குழு அமைக்க வேண்டும். இக்குழு பாதிப்புகள் சம்பந்தமான விவரங்களை சேகரித்து, இழப்பீடு வழங்க அரசுக்கு வழிகாட்ட வேண்டும்.

  மேலும் நிலம், வீடுகளை இழக்கும் குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் அரசு முன்னுரிமை வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் சார்பில் 24-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்னா நடைபெறும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai