சுடச்சுட

  

  திற்பரப்பு அருவியில் விளம்பர கம்பங்களை அகற்றக் கோரி  பேரூராட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

  By  குலசேகரம்  |   Published on : 22nd August 2013 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் உள்ள விளம்பரக் கம்பங்களை அகற்ற வலியுறுத்தி திற்பரப்பு பேரூராட்சித் தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
   திற்பரப்பு அருவியில் அண்மையில் காவல் உதவி மையம் திறக்கப்பட்டது. இதற்கான கட்டடம் கட்டும் பணி காவல் துறை மூலம் தனியார் விளம்பரதாரருக்கு அளிக்கப்பட்டது. அதற்கு ஈடாக அருவிப் பகுதியில் தனியார் நிறுவனங்களின் விளம்பரப் பதாகைகள் அமைத்துக்கொள்ள விளம்பரதாரருக்கு போலீஸôர் அனுமதியளித்ததாகக் கூறப்படுகிறது.
   இதையடுத்து, அருவிப் பகுதியில் விளம்பரப் பலகைகள் வைக்க 53 கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7 கண்காணிப்புப் கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளன. இக் கேமராக்களை இயக்கும், பராமரிக்கும் பணிகளும் விளம்பரதாரருக்கு காவல் துறை மூலம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
   இந்நிலையில், பேரூராட்சி அனுமதியின்றி அருவிப் பகுதியில் வைக்கப்பட்ட விளம்பரக் கம்பங்களை அகற்றக் கோரியும், கண்காணிப்பு கேமராக்களை போலீஸôர் மட்டுமே இயக்க வலியுறுத்தியும் பேரூராட்சித் தலைவர் புஷ்பரதி மனோகரன் தலைமையில் உறுப்பினர்கள் பிற்பகல் 2 மணிக்கு உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கினர். துணைத் தலைவர் சுரேஷ், உறுப்பினர்கள் வினோத்குமார், ஸ்டாலின்தாஸ், சசிகுமார், யோபு, கிருஷ்ணவேணி, ராஜேந்திரன், ராஜமணி, செந்தில், ரெகு, உஷா, ஜானகி, விஜயன், ஷீலா, செலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   இதுகுறித்து புஷ்பரதி மனோகரன் கூறியதாவது: திற்பரப்பு அருவியில் விளம்பரப் பலகைகள் வைக்க பேரூராட்சி மன்றம் அனுமதி அளிக்கவில்லை. கண்காணிப்பு கேமராக்களை இயக்கும், பராமரிக்கும் பணிகளையும் விளம்பரதாரர்களுக்கு கொடுக்கவில்லை.
   இது தொடர்பாக கடந்த 16-ம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட உள்ளிருப்புப் போராட்டத்தின்போது, இப் பிரச்னைக்கு பேரூராட்சிச் செயலர் அலுவலர் ஆக. 20-க்குள் தீர்வு காணப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால் தீர்வு ஏற்படவில்லை. இதனால் 2-வது முறையாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது என்றார் அவர்.
   அதிகாரிகள் வரவில்லை: போராட்டம் தொடங்குவதற்கு சற்று முன்னர் பேரூராட்சிச் செயல் அலுவலர் சுப்புராஜ், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கூறிச் சென்றாராம்.
   இதனால் மாலை 6 மணிவரை பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் எவரும் வரவில்லை. இதனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. போராட்டம் அலுவலகத்தின் பிரதான அறையில் நடைபெற்றதால் மாலையில் அலுவலகத்தைப் பூட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai