சுடச்சுட

  

  தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற்ற வட்டாட்சியர் சுகிபிரேமலா, தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையை தனது நடவடிக்கைகளுக்குத் துணை புரிந்த ஊழியர்கள் இருவருக்கு வழங்கி அந்த விருதுக்கே பெருமை சேர்த்துள்ளார்.

  குமரி மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு பறக்கும் படை வட்டாட்சியராகப்  பணிபுரிந்து வருபவர் சுகிபிரேமலா. இவர் விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலராக  சுமார் 15 மாதம் பணிபுரிந்தார். அப்போது கேரளத்துக்கு கடத்த முயன்ற 107 டன்  ரேஷன் அரிசி, 20 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 1500 கிலோ வெடிபொருள்கள் ஆகியவற்றை அதிரடியாகப் பறிமுதல் செய்தார்.

  இவரது துணிச்சலான நடவடிக்கைகளைப் பாராட்டி இவருக்கு கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், வட்டாட்சியர் சுகிபிரேமலாவுக்கு விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

  இந்நிலையில், தனக்கு கிடைத்த பரிசுத் தொகையிலிருந்து தலா ரூ.1 லட்சத்தை தனது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாகச் செயல்பட்ட வருவாய் ஆய்வாளர்  ஜோதிஸ்குமார், ஜீப் ஒட்டுநர் ஜான்பிரைட் ஆகியோருக்கு வட்டாட்சியர் சுகிபிரேமலா செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

  இதுகுறித்து அவர் கூறும்போது, கடத்தல் சம்பவங்கள் பெரும்பாலும் அதிகாலை வேளையில்தான் நடைபெறும். வருவாய் ஆய்வாளர் ஜோதிஸ்குமார், ஓட்டுநர் ஜான்பிரைட்  ஆகியோரை எந்த நேரம் அழைத்தாலும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடத்தலை தடுக்க துணிச்சலோடு உதவி புரிந்து வருகின்றனர். எனவே, நான் பெற்ற பரிசுத் தொகையை அவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதில் மிக்க மகிழச்சியடைகிறேன் என்றார்  அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai