சுடச்சுட

  

  அதிகரிக்கும் விபத்துகளைக் கட்டுப்படுத்த, கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதான சாலைகளை விரைந்து சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  மாவட்டத்தில் சில ஆண்டுகளாக சாலைகள் உரிய தரத்துடன் சீரமைக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழையால் மாவட்டத்தில் 1,000 கிமீ தொலைவுவரை தேசிய, மாநில, ஊரக  நெடுஞ்சாலைகள் சேதமடைந்தன. ஆனால் அவை உடனடியாக சீரமைக்கப்படவில்லை.

  இதனால் மாவட்டத்தில் நாளுக்குநாள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தவறிவிழுந்து காயமடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

  இதுகுறித்து பாரதிய வாடகை வாகன ஓட்டுநர் சங்க நிர்வாகி வேலப்பன் கூறியதாவது:

  மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை உள்பட எந்தச் சாலையும் இதுவரை இல்லாத அளவுக்கு சேதமடைந்துள்ளன. நாளுக்குநாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்துவரும் நிலையில், சாலைகளைச் சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. வாகன உரிமையாளர்களிடமிருந்து சாலை வரி உள்பட பல்வேறு வரிகள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் சாலை சீரமைப்பில் மெத்தனப்போக்கே கடைப்பிடிக்கப்படுகிறது.

  பழுதான சாலைகளால் வாகனங்களும் பழுதாகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர். பழுதான சாலைகளால் விபத்துகள் நேரிட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. குலசேகரம் பகுதியில் சில நாள்களுக்கு முன்பு மொபெட்டில் சென்றவர், சாலையில் உள்ள பள்ளத்தில் இடறிவிழுந்து இறந்தார்.

  எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த அனைத்துச் சாலைகளையும் சீரமைக்க மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai