நாகர்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு விழாவில், கையேடு மற்றும் ஸ்டிக்கர்களை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆ.முத்து சாரதா வெளியிட்டார்.
மண்டைக்காடு ஏ.எம்.கே. மது, போதை மருந்து சிகிச்சை மறுவாழ்வு மையம் மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு விழாவை நடத்தின.
விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மறுவாழ்வு மைய இயக்குநர் அருள்கண்ணன் முன்னிலை வகித்தார். சுவாமி பத்மேந்திரா ஆசியுரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி முத்து சாரதா கலந்து கொண்டு போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கையேடு மற்றும் ஸ்டிக்கர்களை வெளியிட்டார். அதனை முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், மனநலப் பிரிவு இணைப் பேராசிரியர் டாக்டர் அருள் பிரகாஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
போதை எதிர்ப்பு விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி, கவிமணி பள்ளி, திற்பரப்பு, கடியபட்டணம், நல்லூர், மார்த்தாண்டம் அரசுப் பள்ளிகளுக்கும், போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பணியை மேற்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர் போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் போதைப் பொருள் கட்டுப்பாட்டுத் துறை நுண்ணறிவு அதிகாரி சையது சாரிக் உமர், ஏ.எம்.கே. நிறுவன இயக்குநர் அருள்ஜோதி, மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் புஸ்பவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எஸ்.எல்.பி. அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ரீடா மில்ரெட் கோல்டி வரவேற்றார்.