நாகர்கோவில், செப். 23: ஆரல்வாய்மொழி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசு விரைவுப் பேருந்து ஓடையில் பாய்ந்ததில் 25 பயணிகள் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து திங்கள்கிழமை புறப்பட்டது. பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு ஆரல்வாய்மொழி அருகே, மூவேந்தர் நகர் அருகே வந்து கொண்டிருந்தது. பேருந்தை சிவகாசியைச் சேர்ந்த ஜோதி ஓட்டினார். இதில், 25 பயணிகள் இருந்தனர்.
அப்போது, எதிரே நெல் மூட்டைகளுடன் வந்த டெம்போ, அரசுப் பேருந்து மீது மோதியது. இதனால் நிலைதடுமாறிய பேருந்து அருகில் உள்ள ஓடையில் பாய்ந்தது.
விபத்து நடந்தபோது பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். பேருந்து விபத்தில் சிக்கியதை அறிந்ததும் பயணிகள் அலறினர்.
சம்பவம் குறித்து அறிந்ததும், அப்பகுதியைச் சேர்ந்தோர் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர். விபத்தில் ஒரு மூதாட்டி உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்தனர். 17 பயணிகள் சிறு காயங்களுடன் தப்பினர். இவர்கள் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நடந்தபோது டெம்போவில் இருந்து நெல் மூட்டைகள் சாலையில் சிதறின. இதையடுத்து, மாற்று வாகனம் மூலம் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்தினால் அப்பகுதியில் 30 நிமிடம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.