கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா புதன்கிழமை (செப். 24) தொடங்குகிறது. இவ்விழா 10 நாள்கள் நடைபெறுகிறது.
முதல் நாள் விழாவையொட்டி காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளல், காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 9 மணிக்கு தேவி வெள்ளிக் கலைமான் வாகனத்தில் வீதியுலா வருதல் நடைபெறும்.
விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், பஜனை, ஆன்மிக உரை, அன்னதானம், வாகன பவனி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.
10ஆம் நாள் விழாவான அக்டோபர் 3ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6 மணிக்கு தேவி அலங்கார மண்டபத்துக்கு வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தல் நடைபெறும். காலை 10.30 மணிக்கு அன்னதானம், பிற்பகல் 12 மணிக்கு தேவி வெள்ளிக் குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பரிவேட்டைக்கு புறப்படுதல் நடைபெறும்.
பரிவேட்டை ஊர்வலத்துடன் பகவதியம்மன் பக்தர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அணிவகுத்துச் செல்லும். விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பழத்தோட்டம், பரமார்த்தலிங்கபுரம் வழியாகச் செல்லும் ஊர்வலம் மகாதானபுரம் காரியக்கார மடத்தைச் சென்றடையும்.
அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து நரிக்குளத்தில் பாணாசூரன் என்ற அரக்கனை அம்மன் வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டுச் செல்வர்.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட அறநிலையத் துறை இணை ஆணையர் இரா.ஞானசேகர், பகவதியம்மன் கோயில் மேலாளர் தா.சோனாசலம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.