கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே சுனாமி மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பல்நோக்கு கட்டடம் கட்டும் பணிக்கு பொதுமக்களில் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
கொல்லங்கோடு பகுதியில் அரசு மருத்துவமனை அமைக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை கிராமத்தில் மருத்துவமனை அமைக்க அப்பகுதி பங்குத்தந்தை 1 ஏக்கர் 2 சென்ட் நிலத்தை அரசுக்கு வழங்கினாராம். இதையடுத்து, அங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதி காலியாக கிடந்ததாம்.
எனவே அப்பகுதியில் கூடுதல் கட்டடங்கள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள அண்மையில் அதிகாரிகள் சென்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனராம். இதனால் அதிகாரிகள் திரும்பிச் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அப்பகுதியினர் அங்கு விளையாட்டு மைதானம் அமைத்து பயன்படுத்தி வந்தனராம். இந்நிலையில், குளச்சல் டி.எஸ்.பி. செல்வராஜ், நாகர்கோவில் ஏ.எஸ்.பி. இளங்கோ, பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அருண் சத்யா, விளவங்கோடு வட்டாட்சியர் ஜேன்கிறிஸ்டி, பொதுப்பணித் துறை பொறியாளர் ஆசைத்தம்பி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அப்பகுதிக்கு வந்தனர்.
இதையடுத்து, அங்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள அப்பகுதியினரில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து திரண்டு வந்தனராம். மேலும் படகுகளை சாலையின் குறுக்கே நிறுத்தி, காவல்துறையின் 4 வாகனங்களைச் சிறைப்பிடித்தனர். தொடர்ந்து கோட்டாட்சியர் அருண்சத்யா மற்றும் போலீஸார், போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினர்.
சிறிது நேரத்துக்குப் பின், போராட்டக்காரர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட போலீஸாரின் வாகனங்களை விடுவித்தனர். தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத் தொடந்து போலீஸ் பாதுகாப்புடன் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
இங்கு, சுனாமி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் அரசு ரூ. 1.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல்நோக்கு கட்டடம் கட்டப்படுகிறது.