நாகர்கோவில், செப். 23: ஐ.நா. சபையில் இலங்கை அதிபர் ராஜபட்ச பேச எதிர்ப்பு தெரிவித்து, குமரி மாவட்டத்தில் திமுகவினர் வியாழக்கிழமை (செப். 25) கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, திமுக குமரி மாவட்டச் செயலர் என். சுரேஷ்ராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல், தமிழ் இனப்படுகொலைகள் போன்றவைகளுக்காக ஐ.நா மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவினரை அனுமதிக்க மறுத்த இலங்கை அதிபர் ராஜபட்ச அல்லது அந்நாட்டின் எந்த ஒரு பிரதிநிதியும் ஐ.நா. சபையில் பேசுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செப். 25ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க திமுக தலைமை முடிவு எடுத்துள்ளது. அதனடிப்படையில் தமிழ் பற்றுடையவர்கள், அனைத்து ஒன்றிய, நகரச் செயலர்கள், பொதுக்குழு, பேரூர் கிளைச் செயலாளர்கள், இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட அணிகளைச் சேர்ந்தவர்கள் அன்று கருப்பு சட்டை அணிந்தும், வீடுகள், தெருக்களில் கருப்புக் கொடி ஏற்றியும் கண்டனத்தை உணர்வுப்பூர்வமாகத் தெரிவிக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.