Enable Javscript for better performance
 இது பிரச்னை என்ன தீர்வு? மதுரைக் கோட்டத்துடன் இணையுமா, குமரி மாவட்ட ரயில் வழித்தடங்கள்?- Dinamani

சுடச்சுட

    

     இது பிரச்னை என்ன தீர்வு? மதுரைக் கோட்டத்துடன் இணையுமா, குமரி மாவட்ட ரயில் வழித்தடங்கள்?

    By dn  |   Published on : 27th March 2014 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்திலிருந்து பிரிக்கப்பட்டு தாய்த் தமிழகத்துடன் இணைக்கப்பட்டாலும், ரயில்வே வளர்ச்சித் திட்டப் பணிகளைப் பொருத்தவரை இன்னமும் கேரளத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவில்லை.

    கன்னியாகுமரி மாவட்ட ரயில் வழித்தடங்களை மதுரைக் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற 30 ஆண்டு கோரிக்கை பேச்சளவிலேயே உள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

    திருநெல்வேலியிலிருந்து ரயில் பாதை இணைப்பு நாகர்கோவிலுக்கு இல்லாதபோது, அதன் நிர்வாகப் பொறுப்பு 1979-ல் உருவாக்கப்பட்ட நிபந்தனையின் அடிப்படையில், திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துடன் இணைக்கப்பட்டது.

    திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் பாதை இணைப்பு முடிந்தவுடன் இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரயில் வழித்தடங்களும் மதுரைக் கோட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

    அதன்படி, நாகர்கோவில் - திருநெல்வேலி இடையேயான 73 கிமீ தொலைவு ரயில்வழித் தடம் 2.4.1981-ல் தொடங்கப்பட்டது. இந்த வழித்தடம் தொடங்கப்பட்டதும், நிபந்தனை அடிப்படையில் இங்குள்ள ரயில் வழித்தடங்கள் மதுரைக் கோட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நிபந்தனைக்கு மாறாக, நிர்வாகப் பொறுப்பு திருவனந்தபுரம் கோட்டத்திலேயே தொடர்கிறது. இது மட்டுமன்றி புதிதாக தொடங்கப்பட்ட ரயில் வழித்தடமும் திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கப்பட்டது.

    இம் மாவட்டத்தில் உள்ள ரயில் பாதைகள் மட்டுமன்றி திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம் வரையிலான ரயில் பாதைகளும் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ்தான் உள்ளன. இதனால், இங்குள்ள ரயில் நிலையங்களில் வளர்ச்சிப் பணி என்பது பெயரளவில்கூட இல்லை.

    குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களில் கழிப்பறை, குளியலறை, நடைமேடை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால், தெற்கு ரயில்வேயின் வருவாயில் முக்கிய பங்கை இங்குள்ள ரயில் நிலையங்கள்தான் ஈட்டித்தருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வசதியை நிராகரித்து, கேரள மக்களின் நலனை மட்டுமே கணக்கில்கொண்டு பட்டியலிடப்படுகின்றன. ரயில்கள் புறப்படும், வந்துசேரும் நேரங்கள், இம் மாவட்ட மக்களுக்கு பாதகமாகவும் கேரள மக்களுக்கு சாதகமாகவும் உள்ளன.

    இப் பிரச்னைகுறித்து அவ்வப்போது பேசப்பட்டாலும், இணைப்பு குறித்த பேச்சு இடையிலேயே நின்றுவிடுகிறது.

    இதனிடையே, சென்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதைக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் அப் பணி முடங்கியுள்ளது. அவ்வப்போது இரட்டை வழித்தடங்களுக்கான பணி தொடங்கினாலும் நிதிப் பற்றாக்குறையால் அப் பணியும் நடைபெறவில்லை.

    கன்னியாகுமரி - சென்னை இடையேயான தண்டவாளத்தில் 100 சதவீதத்துக்கும் மேல் ரயில் சேவை நடைபெறுவதாகவும், இனி இரட்டை ரயில் பாதை வசதி இருந்தால்தான் கூடுதல் ரயில் இயக்கமுடியும் என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து மக்களவை உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை என்பது ரயில் பயணிகளின் ஆதங்கம். வரும் மக்களவைத் தேர்தலில் வெல்வோர் கட்சி வேறுபாடுகளை மறந்து தென்தமிழகத்தின் ரயில்வே வளர்ச்சிக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதே இம் மாவட்ட பொதுமக்கள், ரயில்வே பயணிகளின் மிகுந்த எதிர்பார்ப்பு.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai