Enable Javscript for better performance
அனுமதிச் சீட்டின்றி இயக்கப்பட்ட ஆம்னி பஸ் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அனுமதிச் சீட்டு இல்லாமலும், வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட கேரள பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்தை, திருநெல்வேலி சரக போக்குவரத்து துணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

    கேரள மாநில வாகனங்கள் அனுமதிச்சீட்டு இல்லாமலும், உரிய வரி செலுத்தாமலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வருவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்த புகார்களையடுத்து, திருநெல்வேலி சரக போக்குவரத்து துணை ஆணையர் வி.பாலன் தலைமையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகன், மாணிக்கம், பறக்கும்படை ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை களியக்காவிளை சோதனைச் சாவடி மற்றும் மார்த்தாண்டத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அனுமதிச்சீட்டு இல்லாமலும், வரி செலுத்தாமலும் தமிழக பகுதியில் இயக்கப்பட்ட கேரள பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பேருந்திலிருந்து ரூ. 85 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    தொடர்ந்து மேற்கொண்ட வாகன கண்காணிப்பில், அதிக பாரம் ஏற்றிவந்த 15 கேரள பதிவெண் கொண்ட லாரிகள் கண்டறியப்பட்டு அந்த லாரிகளிலிருந்து மொத்தம் ரூ. 1.15 லட்சம் இணக்க கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

    மேலும் இரு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த வாகனச் சோதனையில் மொத்தம் ரூ. 2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    மேலும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அனுமதிச் சீட்டு இன்றியும், வரி செலுத்தாமலும் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai