சுடச்சுட

    

    குமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை திருவிழா

    By கன்னியாகுமரி  |   Published on : 04th October 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவின் 10ஆம் நாளான வெள்ளிக்கிழமை (அக்.3) பரிவேட்டை நடைபெற்றது.

    இதில், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.

    இந்தியாவின் புகழ்பெற்ற ஆலயங்களில் முக்கியமானது கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாகம் மற்றும் நவராத்திரி திருவிழாக்கள் 10 நாள்கள் நடைபெறும்.

    நிகழாண்டு நவராத்திரி திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம், புஷ்பாபிஷேகம், ஆன்மிக உரை, பக்தி இன்னிசை, அம்மன் வீதியுலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

    10ஆம் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 10.30 மணிக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. பகல் 12 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்குப் புறப்பட்டார்.

    ஊர்வலத்தில் யானை, குதிரை அணிவகுக்க முத்துக்குடை, கேரள புகழ் தையம் ஆட்டம், கரகாட்டம், தப்பாட்டம், செண்டை மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து சென்றன. வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சை, ஆப்பிள் பழத்திலான மாலைகளை அணிவித்தும், சுருள் வைத்தும், உயர்ந்த கட்டடங்களில் இருந்து மலர்தூவியும் வழிபட்டனர்.

    ஊர்வலம், விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பழத்தோட்டம், பரமார்த்தலிங்கபுரம் வழியாக மகாதானபுரம் பரிவேட்டை மண்டபத்தை மாலை 6.30 மணிக்கு சென்றடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நரிக்குளம் பகுதியில் பாணாசூரனை அம்மன் வதம் செய்யும் பரிவேட்டை நடைபெற்றது. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து திரிவேணி சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெற்றது. அதன்பின் கிழக்கு வாசல் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசித்தார்.

    விழா ஏற்பாடுகளை தேவசம் போர்டு இணை ஆணையர் இரா.ஞானசேகர், கோயில் மேலாளர் தா.சோனாச்சலம், தலைமை கணக்கர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    படகு சேவை ரத்து: பரிவேட்டை ஊர்வலம் நடைபெற்றதையடுத்து பகல் 12 மணி தொடங்கி மாலை 4 மணி வரை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    போக்குவரத்து மாற்றம்: நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி வந்த வாகனங்கள் கொட்டாரத்தில் இருந்து அகஸ்தீசுவரம், கோவளம் வழியாக கன்னியாகுமரி பேருந்து நிலையத்துக்கு வந்தன. அஞ்சுகிராமத்தில் இருந்து கன்னியாகுமரி வந்த வாகனங்கள் விவேகானந்தபுரத்தில் இருந்து மீண்டும் அதே வழியில் இயக்கப்பட்டன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai