Enable Javscript for better performance
நவராத்திரி பூஜைக்கு திருவனந்தபுரம் சென்ற சுவாமி விக்ரகங்கள் குமரிக்கு திரும்பின- Dinamani

சுடச்சுட

    

    நவராத்திரி பூஜைக்கு திருவனந்தபுரம் சென்ற சுவாமி விக்ரகங்கள் குமரிக்கு திரும்பின

    By களியக்காவிளை  |   Published on : 07th October 2014 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜைக்கு சென்ற குமரி மாவட்ட சுவாமி விக்ரகங்கள் திங்கள்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட எல்லையான களியக்காவிளைக்கு கொண்டு வரப்பட்டன.

    திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனை பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, ஆண்டுதோறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரத்திலிருந்து சரஸ்வதி அம்மன் சிலையும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் மற்றும் குமாரகோவில் குமாரசுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு நவராத்திரி பூஜைகள் நிறைவுபெற்ற பின் குமரி மாவட்டத்துக்கு கொண்டுவரப்படும் வழக்கம் மன்னர் ஆட்சிக் காலம் முதல் பின்பற்றப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கம்பர் பூஜித்ததாக கருதப்படும் பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மனை நெற்றிப் பட்டம் சூட்டி, முத்துக்குடை பிடிக்கப்பட்ட யானை மீதும், சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், வேளிமலை குமாரகோவில் குமாரசுவாமி விக்ரகங்கள் பல்லக்கிலும் செப்டம்பர் 21ஆம் தேதி பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு பவனியாகச் சென்றன. சுவாமி விக்ரகங்களுக்கு முன்னால், மன்னர் பயன்படுத்திய உடைவாள் ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டது.

    திருவனந்தபுரத்தில் நவராத்தி பூஜை நிறைவுபெற்றதையடுத்து, அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை திரும்பிய சுவாமி சிலைகள், அன்றிரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயிலில் இரவு தங்கலுக்குப் பின்னர், திங்கள்கிழமை அங்கிருந்து திரும்பின. வழிநெடுகிலும் பக்தர்கள் தட்டு பூஜை நடத்தி சுவாமி விக்ரகங்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    களியக்காவிளை அருகே கேரள பகுதியான இஞ்சிவிளையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் 3 மினி லாரிகளில் கொண்டுவரப்பட்ட பூக்களை வாரி இறைத்து வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 3.15 மணியளவில் சுவாமி விக்ரகங்கள் களியக்காவிளைக்கு வந்தன. கேரள போலீஸார் ஏராளமானோர் உடன் வந்தனர்.

    தொடர்ந்து திங்கள்கிழமை குழித்துறை மகாதேவர் கோயிலில் இரவு தங்கலுக்குப் பின்னர், சுவாமி விக்ரகங்கள் செவ்வாய்க்கிழமை பத்மநாபபுரம் சென்று அங்கிருந்து முன்னுதித்தநங்கை அம்மன் விக்ரகம் சுசீந்திரம் கோயிலுக்கும், குமாரசுவாமி விக்ரகம் வேளிமலை கோயிலுக்கும் கொண்டுசெல்லப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai