சுடச்சுட

    

    குமரியில் தோட்டந்தோறும் தேன் பெட்டித் திட்டம் ஏற்படுத்தப்படுமா?

    By குலசேகரம்,  |   Published on : 11th October 2014 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தேன் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் தோட்டங்கள்தோறும் தேன் பெட்டி திட்டத்தை தோட்டக்கலைத் துறை உருவாக்க வேண்டுமென்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தேனீ வளர்ப்போர் எதிர்பார்க்கின்றனர்.

    அருமருந்தாகவும், சிறந்த உணவுப் பொருளாகவும் பயன்படும் தேன், உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருளாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் தேனீ வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு மிகப்பெரிய அளவிலான வாய்ப்புகள் இருக்கும் நிலையில் இம்மாவட்டத்தில் திட்டமிட்ட நடவடிக்கைகளால் தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

    தேனீக்களும், உணவு உற்பத்தியும்: உலகில் தேனீக்களால் தான் உயிர்ச் சங்கிலி தொடர்கிறது. தேனீக்கள் இல்லையெனில் மனித சமூகம் உணவின்றி அழிந்துவிடும் என்பது விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கணிப்பு. உலகில் தேனீக்கள்தான் 80 சதவீத உணவுப் பயிர் விளைச்சலுக்குக் காரணமான மகரந்த சேர்க்கையைச் செய்கின்றன.

    சின்னஞ்சிறு அளவில் இருக்கும் தேனீக்கள் கூர்மையான நினைவுத்திறன் கொண்டவை மட்டுமல்லாது, அவைகளின் செயல்பாடுகளும் ஆச்சரியம் அளிப்பதாகும். இவைகள் வாழ்வதற்கு சிறிதளவு இடத்தைக் கூட வீணாக்காமல், அறுங்கோண வடிவில் கட்டும் கூடுகள், அவற்றின் விஞ்ஞான அறிவை பறைசாற்றும் விதத்தில் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    பொதுவாக தேனீக்கள் தங்களது உணவுக்காக மலர்களைத் தேடிச் சென்று, அவற்றில் இருந்து மதுரம் மற்றும் மகரந்தத்தை உணவாக உள்கொள்கின்றன. அதேவேளையில் குளிர்காலங்களில் அல்லது செடி, கொடிகளில் பூக்கள் பூக்காத காலங்களில் தங்களுக்கு தேவையான உணவுக்காக பூக்களில் இருந்து மதுரத்தை எடுத்து வந்து, தங்களின் கூடுகளுக்குக் கொண்டு வந்து, அவற்றுடன் இன்வர்டோஸ் என்னும் நொதியைச் சேர்ந்து தேனாக மாற்றி சேமித்து வைக்கின்றன.

    தேனீக்கள் இவ்வாறு பூக்களில் உள்ள மதுரத்தை உண்ண இடைவிடாது செல்வதால் காடுகள் பரவலாகிறது. பயிர் விளைச்சல் பெருகுகிறது. இதனால்தான் மனித குலத்துக்குத் தேவையான உணவுகள் கிடைக்கின்றன.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தேனீ வளர்ப்புக்கு அதிக வாய்ப்பு: தேனீகளால் பயிர் விளைச்சல் அமோகமாக மாறும் அதேவேளையில் தொழில் முறையில் தேனீ வளர்த்து தேன் உற்பத்தியில் ஈடுபடும் போது விவசாயிகளுக்கும், தொழில் முறையிலான தேன் உற்பத்தியாளர்களுக்கும் அதிக வருவாய் கிடைக்கும்.

    இதற்காக மாவட்டத்தில் தேனீ வளர்ப்பில் புரட்சியை ஏற்படுத்தும் வகையிலான தோட்டங்கள்தோறும் தேன் பெட்டி திட்டத்தை குமரி மாவட்டத்தில் அறிமுகம் செய்து, பயிர் விளைச்சல் மற்றும் தேன் உற்பத்தியைப் பெருக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னோடி தேன் உற்பத்தியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து குலசேகரம் அருகே மலைவிளைப் பகுதியைச் சேர்ந்த முன்னோடி தேன் உற்பத்தியாளர் பி. ஹென்றி கூறியதாவது:

    மார்த்தாண்டம், இந்தியாவின் தேன் கிண்ணம் என்று அழைக்கப்படுகிறது. 1930ஆம் ஆண்டு ஸ்பென்சர் ஹாச் என்ற ஐரோப்பியர் இங்கு தேனீகளை வளர்த்து தேன் உற்பத்தி செய்வது குறித்து, மக்களுக்கு கற்றுக் கொடுத்தார். தொடர்ந்து மார்த்தாண்டம் ஒய்எம்சிஏ இதனை மக்கள் மத்தியில் பரவலாக அறிமுகம் செய்தது.

    குமரி மாவட்டத்தில் மலைத் தேனீ, கொசுத் தேனீ, அடுக்குத் தேனீ என மூன்று வகை தேனீக்களே அதிகமாக உள்ளன. இதில் அடுக்குத் தேனீக்களைத்தான் தேன் உற்பத்தியாளர்கள் வளர்த்து தேன் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்.

    தற்போது குமரி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தேன் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் திருவட்டாறு, மேல்புறம், முன்சிறை ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் இவர்கள் கேரள மாநிலத்துக்குச் சென்று தேன் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் தோவாளை, அகஸ்தீசுவரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குறைவாகவே தேன் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்.

    மாவட்டத்தில் அனைத்துத் தரப்பு விவசாயிகளுக்கும், இதர விவசாய ஆர்வலர்களுக்கும் தோட்டக் கலைத் துறையினர், விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி தேன் உற்பத்தியாளர்களைக் கொண்டு தொழில்நுட்பம் மற்றும் அனுபவப் பயிற்சிகளை வழங்க தேசிய தோட்டக்கலை இயக்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தேனீ வளர்ப்பு மூலம் பயிர் விளைச்சல் பலமடங்கு பெருகுவதுடன், தேனீ வளர்ப்போருக்கு அதிக வருவாயும் கிடைக்கும். இதற்காக மாவட்டம் முழுவதும் தோட்டந்தோறும் தேன் பெட்டி போன்ற திட்டங்களை உருவாக்கி தேன் உற்பத்தியையும், பயிர் விளைச்சலையும் பெருக்கவேண்டும். தற்போது தேசிய தோட்டக்கலை இயக்கம் மிகக்குறைந்த பயனாளிகளுக்கு மட்டும் பயனளிக்கும் வகையில் மானியத் திட்டங்களை வழங்குகிறது. இதனால் மாவட்டத்தில் தேன் உற்பத்தியில் ஆர்வமுள்ள பல விவசாயிகளுக்கு மானியங்கள் கிடைக்கவில்லை. மேலும் தேனீக்களுக்கு நோய்த் தாக்குதல் ஏற்பட்டால் அவற்றைத் தடுக்க போதிய வழி தெரியாமல் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

    தேன் ஏற்றுமதி மற்றும் தேனைப் பாதுகாத்து சந்தைப்படுத்தும் வகையில் உலகளாவிய தொழில்நுட்பங்கள் தேன் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கவேண்டும். இதற்காக, குமரி மாவட்டத்தில் தேன் மற்றும் தேனீ ஆராய்ச்சி மையம் அமைக்கவேண்டும் என்றார்.

    இது குறித்து மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சிவகுமார் கூறியதாவது:

    கன்னியாகுமரி மாவட்டம் தேனீ வளர்ப்புக்கும், தேன் உற்பத்திக்கும் சாதகமான மாவட்டம். தேனீ வளர்ப்பால் பயிர்களில் அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு, விளைச்சல் பெருகும் என்ற வகையில் தேசிய தோட்டக்கலை இயக்கம் பல்வேறு பொருளாதார உதவிகளை விவசாயிகளுக்கும், தேனீ வளர்ப்போருக்கும் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் தற்போது ஒரு தேனீ குடும்பம் இணைந்த தேனீ பெட்டிக்கு மானியமாக ரூ. 1,600 வழங்கப்படுகிறது.

    மேலும் தேன் பிழியும் உபகரணங்கள் வாங்க அதிக பட்சம் ரூ. 8,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் இந்த மானியத்தைப் பெற விவசாயிகள் தங்கள் ஒன்றியப் பகுதிகளில் உள்ள தோட்டக் கலைத் துறையை அணுகலாம் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai