குமரி மாவட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
By நாகர்கோவில், | Published on : 13th October 2014 12:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குமரி மாவட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தோவாளை ஊராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார். அரசின் முன்னோடி திட்டமான ஏழை பெண்களுக்கு 2014-15 ஆம் நிதியாண்டில் அக்டோபர் மற்றும் டிசம்பரில் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்குவதற்கு பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மேலும் கூட்டத்தில் கிராம மக்கள் முன்னிலையில் குடிநீர் விநியோகம் குறித்தும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்குதல் மற்றும் பராமரிப்பு குறித்தும், ஊராட்சி பகுதியில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் பிளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்த்தல், ஊரகப்பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள சூரிய சக்தி தெருவிளக்குகள் பராமரிப்பது, புகையிலை பயன்பாட்டை தடுப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்தும், ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் நிதி செலவின விவரம், மகளிர் திட்டம், புதுவாழ்வு திட்டம், பொது மக்கள் பிரச்னைகள் குறித்தும் கூட்டத்தில் ஆட்சியர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது. பின் கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஆட்சியர் பெற்றார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் கல்யாணசுந்தரம், கால்நடை பராமரிப்பு துணை இயக்குநர் உமா மகேஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் நசீர்பாபு, வட்டாட்சியர் சிந்து, ஊராட்சித் தலைவர் தாணம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுபோல் சாமிதோப்பு, புலியூர்சாலை, திக்கணங்கோடு, திப்பிறமலை, விளாத்துறை, பறக்கை, தெரிசனங்கோப்பு உள்ளிட்ட ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.