Enable Javscript for better performance
கேரளத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கேரளத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    By களியக்காவிளை  |   Published on : 13th October 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே மினிடெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

    பளுகல் அருகேயுள்ள செறியகொல்லை சிறப்பு சோதனைச் சாவடி வழியாக கேரளத்துக்கு மினிடெம்போவில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அருமனை காவல் உதவி ஆய்வாளர் அர்ஜுனன் தலைமையில் போலீஸார் பாலமுருகன், ரஞ்சித் ஆகியோர் அப்பகுதிக்குச் சென்று வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த மினிடெம்போவை நிறுத்த சைகை காட்டினர். மினிடெம்போ நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்றனர். தொடர்ந்து கேரள மாநிலப் பகுதியான குந்நத்துக்கால் தச்சன்கோடு பகுதியில் வைத்து வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். அதன் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 50 கிலோ எடையுள்ள 40 சாக்கு மூட்டைகளில் மொத்தம் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிந்தது. வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து பளுகல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அரிசி காப்புக்காடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    பறக்கும்படை: கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஊழியர் ஜான்பிரைட் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மார்த்தாண்டம் அருகே வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வேகமாக வந்த காரை நிறுத்த சைகை காட்டினர். கார் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் சுமார் 5 கி.மீட்டர் தொலைவு துரத்தி படந்தாலுமூடு அருகில் காரை மடக்கிப் சோதனை செய்தபோது, அதில் சாக்கு மூட்டைகளில் மொத்தம் 800 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதே போன்று நித்திரவிளை அருகே நம்பாளி பகுதியில் ரோந்து சென்ற போது அங்குள்ள தென்னந்தோப்புக்குள் மறைத்து வைத்திருந்த 35 லிட்டர் கொள்ளளவுள்ள 6 கேன்களில் மொத்தம் 210 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெயையும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியிலும், மண்ணெண்ணெயை மார்த்தாண்டம் மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்திலும் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai