சுடச்சுட

    

    குமரி மாவட்டம் சிற்றாறு அணையில் மூழ்கி சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பதைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுப் பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டுமென சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு அடுத்தாக பெரிய அணைகளாக சிற்றாறு அணைகள் உள்ளன. இதில் சிற்றாறு 1 அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி பெருமளவில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. ஆனால் சிவலோகம் பகுதியில் அமைந்துள்ள, பரப்பளவில் பெரியதான சிற்றாறு 2 அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் பெரும்பாலும் நகரப்பகுதிகளையும், தனியார் ரப்பர் தோட்டப் பகுதிகளையும் ஒட்டியே அமைந்துள்ளன. இந்த அணையின் ஒரு பகுதி கரை வழியாக கடையல் ஆறுகாணி - சாலையும் மற்றொரு பகுதி வழியாக களியல்-நெடுமங்காடு சாலையும் செல்கின்றன. இயற்கை எழில் சூழ்ந்து காணப்படும் இந்த சாலைகள் வழியாக பயணம் செய்வது சுற்றுலாப் பயணிகளுக்கு ஆனந்தமான அனுபவம் அளிப்பதாகும்.

    அணையில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் இந்த அணையில் சாலையையொட்டியபகுதிகளில் இறங்கி குளிப்பதற்கும், நீச்சல் அடிப்பதற்கும் பொதுப்பணித்துறையின் அனுமதியை எதிர்பார்ப்பதில்லை. அதனை பொதுப்பணித்துறையினர் தடுக்க முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் இருந்து இந்த அணைப்பகுதிக்கு வரும் இளைஞர்கள் பல நேரங்களில் அணையில் இறங்கி நீச்சல் அடித்து குளிக்கின்றனர். இதில் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை தக்கலை அருகே ராமன் பறம்பைச் சேர்ந்த இளைஞர் விஷ்ணு இந்த அணையில் மூழ்கி உயிரிழந்தார்.

    இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டுமென சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    குறிப்பாக, அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் வெளியூர் நபர்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யும் வகையில் போதிய எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும், அணையின் கரையில் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்குள் மட்டுமே குளிக்கச் செல்ல வேண்டும் என்பன போன்ற அறிவிப்புகளை வைக்க வேண்டும் என்கின்றனர்.

    இது குறித்து பொதுப்பணித்துறையின் நீராதாரப்பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது:

    சிற்றாறு அணை 2-ன் நீர்ப்பிடிப்புப் பகுதியின் இருபுறமும் சாலை செல்வதால் அணையில் இறங்கி குளிப்பவர்களை தடுப்பது எளிதல்ல. உள்ளூர் மக்கள் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்வதில்லை. மேலும் அவர்களுக்கு நீச்சலும் தெரிந்திருக்கிறது. ஆனால், வெளியூரில் இருந்து வரும் இளைஞர்கள் கட்டுப்பாடிலாமல் அணையில் குதிக்கின்றனர். இதனால் பல நேரங்களில் உயிரிழப்புகள் நிகழ்ந்து விடுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு கரைப் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai