சொத்து தகராறில் முதியவர் கொலை
By விளாத்திகுளம் | Published on : 13th October 2014 12:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விளாத்திகுளம் அருகே புதூர் குளக்கட்டாகுறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்டார்.
புதூர் குளக்கட்டாகுறிச்சியை சேர்ந்தவர் ராமர் (75). இவருக்குச் சொந்தமான வீட்டில் இவரது மகன் முத்துகிருஷ்ணன் (50), அவரது மனைவி மீனாட்சி மற்றும் குழந்தைகளுடன் பல ஆண்டுகளாக வசித்து வருகிறாராம்.
இந்நிலையில் ராமர், தன்னுடைய செலவுகளுக்கு உதவும் வகையில், வீட்டு வாடகையாக மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் தரும்படி மகனிடம் கேட்டாராம். இதனால் குடும்பத்துக்குள் சொத்து தகராறு ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாம்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் ராமருக்கும், மருமகள் மீனாட்சிக்கும் இடையே சொத்து பிரச்னை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதில் ராமர், இரும்புக்கம்பியால் மருமகள் மீனாட்சியைத் தாக்கினாராம். இதனால் ஆத்திரமடைந்த மகன் முத்துகிருஷ்ணனும், மருமகள் மீனாட்சியும் சேர்ந்து ஆயுதங்களால் ராமரை வெட்டினராம்.
இதில் பலத்த காயமடைந்த ராமர், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் இறந்தார். மாமனார் தாக்கியதில், பலத்த காயமடைந்த மீனாட்சி விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து, முத்துகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.