Enable Javscript for better performance
இந்து முன்னணி மாநில நிர்வாகி கைது: காவல் நிலையம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    இந்து முன்னணி மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து காவல் நிலையத்தை அந்த அமைப்பினர் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

    கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழி அருகேயுள்ள புதூரில் கடந்த வாரம் இந்து முன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் இந்து முன்னணி மாநில கொள்கை பரப்புச் செயலர் இளங்கவியரசன் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் மத பிரச்னையை தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி ஈத்தாமொழி போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்நிலையில், குமரி மாவட்ட தனிப்படை போலீஸார் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்கள்பட்டிக்குச் சென்று, அங்கு இளங்கவியரசனை கைது செய்து நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். இந்தத் தகவல் குமரி மாவட்டத்தில் உள்ள இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு  தெரியவந்தது. இதையடுத்து, அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மிசா சோமன்,  அகஸ்தீசுவரம் ஒன்றியத் தலைவர் பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவர் அசோகன், பொருளாளர் திரவியம், நாகர்கோவில் நகரத் தலைவர் ராஜா, செயலர் மனோகரன் உள்ளிட்டோர் தென்தாமரைகுளம் காவல் நிலையம் முன் திரண்டனர். கைதான இளங்கவியரசனைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, இளங்கவியரசனை சந்திக்க இந்து முன்னணியினருக்கு போலீஸார் அனுமதி அளித்தனர். பின்னர், நாகர்கோவில் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 3இல் இளங்கவியரசன்  ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai