சுடச்சுட

    

    தாமரைச் செடிகள், கட்டுமானங்களால் குமரி மாவட்டத்தில் அழியும் நிலையில் குளங்கள்

    By நாகர்கோவில்,  |   Published on : 16th October 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் உள்ள குளங்களில் தாமரைச் செடிகள் வளர்க்கப்படுவதாலும், கட்டுமானங்களாலும் குளங்கள் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக உள்ளவை குளங்கள். அந்த குளங்கள் இன்று பராமரிப்பின்றி காணப்படுகின்றன. கரைகள் பலமிழந்தும், தண்ணீர் வெளியேறும் மடைகள் பழுதடைந்தும் உள்ளன. ஷட்டர்கள் இல்லாததால் குளத்தில் உள்ள தண்ணீர் 24 மணிநேரமும் வெளியேறி வருகிறது.

    மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இந்த பிரச்னையைத்தான் விவசாயிகள் எழுப்பி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் தரப்படும் பதில்கள் கவலையளிப்பதாக விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர்.

    நிதி ஒதுக்கீடு வந்ததும், பராமரிப்புப் பணிகள் தொடங்கப்படும் என்ற அதிகாரிகளின் பதில் அனேகமாக எல்லாக் கூட்டங்களிலும் வழக்கமாக தெரிவிக்கப்படுகின்றன.

    கடல் போல் காட்சியளித்த குளங்கள் இன்று பரபரப்பளவு குறைந்து குட்டைகளாகக் காணப்படுகின்றன. குளக்கரைகளில் தொடங்கிய ஆக்கிரமிப்பு படிப்படியாக நீர்தேங்கி உள்ள பகுதிகள் வரை இப்போது நீண்டு கொண்டே செல்கின்றன.

    இதற்கிடையே குளங்களில் தாமரைச் செடிகள் வளர்க்கப்பட்டு அவற்றிலிருந்து பூக்களைப் பறித்து சிலர் விற்பனை செய்தும் வருகின்றனர். பொதுப்பணித் துறையினரால் தாமரை பூ ஏலம் விடப்படாத நிலையில் சிலர் அன்றாடம் பூக்களைப் பறித்து லாபம் அடைந்து வருகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் குளங்களில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாமரை வளர்ந்துள்ள குளங்களில் குளிப்போருக்கு ஒருவித தோல் நோய் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் குளங்களில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

    குளங்களில் உள்ள தண்ணீரைச் சிக்கனமாகச் சேமித்து வைத்து அடுத்த நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராக இருக்கும்போது, மீன்வளர்ப்போர் குளத்தில் உள்ள தண்ணீரை திறந்து விட்டு மீன்பிடிப்பதாகவும் விவசாயிகள் குறை கூறுகின்றனர்.

    சில நேரங்களில் தாமரைப் பூ பறிப்பவர்களுக்கும் மீன்வளர்ப்பவர்களுக்கும் மோதல் உருவாக்கும் சூழ்நிலைக்கூட ஏற்படுகிறது. மொத்தத்தில் விவசாயத்திற்காக குளங்கள் பயன்பட்ட நிலை மாறி, இப்போது வணிக ரீதியாகவும் குளங்கள் பயன்படுத்தப் படுவது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.

    இது குறித்து குமரி மாவட்ட இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் ஆர்.எஸ். லால்மோகன் கூறியது:

    குளங்களில் தாமரைச் செடிகள் வளர்க்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை. குளங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி வருகின்றன. குளங்களில் வீடு மற்றும் கட்டடங்கள் கட்டக் கூடாது என்று நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்த உத்தரவு மீறப்பட்டுள்ளது. ஆண்டார்குளத்தில் உத்தரவை மீறி கல்யாண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. குளங்களில் கட்டுமானங்கள் அதிகமானதால் பல குளங்கள் அழிந்து விட்டன. எனவே எஞ்சி உள்ள குளங்களாவது காப்பற்றப்பட வேண்டும்.

    நீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்படுத்தினால் தற்போது அழிவு நிலைகளில் இருக்கும் குளங்களையாவது காப்பாற்ற முடியும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai