சுடச்சுட

    

    நாகர்கோவிலில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பங்கேற்காததற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவர் சாரதாமணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்லசாமி, செயலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட பொருள் குறிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது குமரி மாவட்டத்தில் கடைவரம்பு பகுதிக்கு தண்ணீர் வராதது குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் கொண்டுவரப்பட்ட பொருள் குறிப்புக்கு அரசு தரப்பில் பதில் அளிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூட்டத்துக்கு வரவில்லை.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர் ஜான்சிலின் விஜிலா பேசினார். இதையடுத்து பேசிய உறுப்பினர் தாணுபிள்ளை, அடுத்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை அழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். உறுப்பினர் தர்மராஜ் பேசும்போது, கூட்டம் முடிந்ததும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இந்த கோரிக்கையை அவரிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றார்.

    இதையடுத்து பேசிய உறுப்பினர்கள், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 2011-2012 ஆண்டுக்கு பின் இதுவரை சோலார் விளக்குகள் பொருத்தப்படவில்லை என்றனர். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள், சோலார் விளக்கு பொருத்துவது குறித்து மின்வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.

    டீசல் தட்டுப்பாடு காரணமாக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன என உறுப்பினர் ஜேக்கப் சதா கூறினார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்துக் கழக அதிகாரி, இப்போது நிலைமை சீரடைந்து உள்ளதாகவும், பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai