சுடச்சுட

    

    பத்மநாபபுரம் நகராட்சியில் மேலும் 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்

    By தக்கலை  |   Published on : 17th October 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்மநாபபுரம் நகராட்சியில் சீரான முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தக்கலை, பத்மநாபபுரம், கரும்பாறை, குமாரகோவில் ஆகிய இடங்களில் நான்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.சத்யாதேவி வியாழக்கிழமை தெரிவித்தார்.

    பத்மநாபபுரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.ஆர்.சத்யாதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையர் (பொறுப்பு) டெல்விஸ்ராஜ், மேற்பார்வையாளர் மோகன் மற்றும் அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

    செய்யது அலி: நகராட்சிப் பகுதியில் கொசுத் தொல்லை மிகுந்து காணப்படுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் வரும் வாய்ப்புள்ளது. எனவே, கொசுக்களை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சிப் பகுதிகளில் உள்ள 5 மாடி கட்டடங்கள் உறுதியற்ற நிலையில் காணப்படுகின்றன. வரும் காலங்களில் விபத்துகளைத் தவிர்க்கும்பொருட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களைக் கொண்டு நகராட்சி ஆய்வு நடத்த வேண்டும்.

    தலைவர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    விஜிலா: என்னுடைய வார்டில் மின்கம்பங்கள் காட்சிப் பொருளாகவே நிற்கின்றன. மின் விளக்குகள் எதுவும் எரிவதில்லை. பராமரிப்பு ஊழியரிடம் கேட்டால் எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறுகிறார்.

    தலைவர்: ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் குறைபாடு எதுவும் இல்லை. உங்களுடைய வார்டுகளில் விளக்குகள் எரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

    உவைஸ், செய்யது அலி: பக்ரீத் திருநாளன்று வார்டுகளில் தண்ணீர் வரவில்லை என மக்கள் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிந்தவுடன் உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யபட்டது. குடிநீர் இருந்தும் திருநாளன்று ஏன் வார்டுகளில் குடிநீர் விநியோகம் செய்யவில்லை? வீடுகளுக்கு வழங்கப்பட வேண்டிய குடிநீர் சில ஹோட்டல்களுக்கு தினசரி வழங்கப்பட்டு வருகிறது.

    தலைவர்: அனைத்து வார்டுகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இனிமேல் திருநாள்களில் இதுபோன்று காலதாமதம் ஏற்படாது. எந்த ஹோட்டல்களுக்கு குடிநீர் தினசரி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழக முதல்வர் ரூ.169 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் நகராட்சியில் மேலும் நான்கு மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தக்கலை, பத்மநாபபுரம், கரும்பாறை, குமாரகோவில் ஆகிய இடங்களில் அந்த நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படும்.

    உவைஸ்: நமது நகராட்சிப் பகுதிகளில் எத்தனை கடைகள் உள்ளன? அத்தனைக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளதா, எத்தனை கடைகள் வரி செலுத்துகிறார்கள் என்பதை கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். பணம் வாங்கியும் பல கடைகளுக்கு உரிமம் வழங்கப்படவில்லை. நகராட்சிக் கடைகளில் உள்ள வரியை வசூலித்தாலே நகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்க முடியும்.

    ஆணையர் (பொறுப்பு) டெல்விஸ்ராஜ்: 2013-2014ஆம் ஆண்டுகளில் கடைகள் அனைத்துக்கும் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது.

    தலைவர்: கடைகளில் பணம் கொடுத்தும் உரிமம் வழங்கப்படவில்லை என்பதை தகுந்த சான்றுகளுடன் கூறுங்கள், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    முன்னதாக கூட்டத்தில், அண்மையில் விபத்தில் இறந்த நகராட்சி கணக்கர் குமாருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai