சுடச்சுட

    

    குமரியில் அழகிய கடற்கரை உருவாக்கப்படுமா?

    By கன்னியாகுமரி  |   Published on : 21st October 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சென்னை மெரீனா கடற்கரையைப் போன்று அழகிய கடற்கரையை உருவாக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் இரண்டையும் இங்கு தெளிவாகக் காணலாம் என்பதால் ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுற்றுலா புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    கன்னியாகுமரி, கடற்கரையை ஒட்டிய அழகிய பகுதி என்பதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலின் அழகை கரைப் பகுதியில் அமர்ந்து ரசித்துச் செல்கின்றனர். வங்காள விரிகுடா, இந்துமகா சமுத்திரம், அரபிக்கடல் ஆகிய மூன்று கடல்களும் ஒருசேர சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாகும். இப் பகுதியில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தால் பொழுது போவதே தெரியாத அளவுக்கு இயற்கை அமைப்பு பயணிகளை கட்டிப் போட்டுள்ளது என்றால் மிகையாகாது. திரிவேணி சங்கமத்தில் பாதுகாப்பு கருதி ஆக்ரோஷமாக எழும் அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கடலுக்குள் கருங்கற்களால் ஆன பாலம் அண்மையில் அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் போதிய திட்டமிடுதல் இன்றி அமைக்கப் பட்டதால் திரிவேணி சங்கமத்தின் இயற்கை அழகை முற்றிலும் சேதப்படுத்தி விட்டது. இதனால் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து கடலின் அழகை ரசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காமராஜர் மணி மண்டபம் தொடங்கி சூரிய அஸ்தமன காட்சிக் கோபுரம் வரையிலான கடற்கரைப் பகுதியில் கடலரிப்புத் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கும் பயணிகள் உட்கார முடியாத நிலை உள்ளது. சூரிய அஸ்தமன காட்சிக் கோபுரம் தொடங்கி, சிலுவை நகர் பகுதி வரையிலான 1 கி.மீ. தொலைவுக்கு இயற்கை அழகு நிறைந்து காணப்படுகிறது. இப் பகுதியில் செயற்கையாகக் கடல் மணலை பரப்பினால் சென்னை மெரீனா கடற்கரையைப் போன்று சுற்றுலாப் பயணிகள் விரும்பும் வகையில் அழகிய கடற்பகுதியை உருவாக்க இயலும். இப் பகுதியில் அழகிய கடற்கரையை உருவாக்கும் வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மெகா சுற்றுலாத் திட்டத்தின் கீழ் ரூ. 14 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயற்கை கடற்கரை உருவாக்கும் பணி தொடங்கியது. ஆனால் இந்தப் பணிகள் முற்றுப் பெறாமல் உள்ளது சுற்றுலாப் பயணிகளிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

    இது குறித்து இயற்கை ஆர்வலரான டி.ஜான் சேவியர் ராஜன் கூறியதாவது:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இயற்கை எழில் சூழ்ந்த கடற்பகுதிகள் அமைந்துள்ளன. திரிவேணி சங்கமம், சொத்தவிளை, சங்குதுறை, முட்டம், வட்டக்கோட்டை, தேங்காய்பட்டினம் உள்ளிட்ட எழில்மிகு கடற்கரைப் பகுதிகள் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளன. கன்னியாகுமரியைப் பொருத்த வரையில் சர்வதேச முக்கியத்துவம் பெற்று விளங்குவதால் இங்கு பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் விரும்பும் வகையில் அழகிய கடற்கரையை உருவாக்குவதற்கான இடமும், வாய்ப்பும் உள்ளதால் இதை சுற்றுலாத்துறை கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

    சென்னை மெரீனாவுக்கு இணையான கடற்கரையை உருவாக்குவதோடு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விரும்பும் வகையில் அழகிய குடில்களையும் இப் பகுதியில் உருவாக்கவும் சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai