அக். 8 இல் கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் போட்டிகள்
By DN | Published on : 22nd October 2014 04:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குமரி மாவட்ட கல்லூரி மாணவர், மாணவிகளுக்கிடையே தமிழில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் அக். 8 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா. சவாண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக். 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான தமிழில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கத்தில் தமிழில் நடைபெறும் இப்போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர், மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரமும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டிகள் குறித்த விவரங்கள் சுற்றறிக்கை வாயிலாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர், மாணவிகள் சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவர். மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 12 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகள் சென்னை சென்று வருவதற்கு இரண்டாம் வகுப்பு கட்டணம் அல்லது பேருந்து கட்டணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் ஆட்சியர்.