சுடச்சுட

  

  மார்த்தாண்டம் பகுதியில் அதிக கட்டணம் வசூலித்த 5 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 1.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

  தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்து இயக்கப்படுவதாக அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

  இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் க. முருகன், ஆர். மாணிக்கம், மே.ரா. முகுந்தன் உள்ளிட்டோர் கடந்த 3 நாள்களாக வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

  இச்சோதனையில், மோட்டார் வாகன சட்டத்துக்கு புறம்பாகவும், முறையாக வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட 5 ஆம்னி பேருந்துகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

  அந்த வாகனங்களின் அசல் பதிவுச் சான்று மற்றும் அனுமதிச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டதுடன், இவ் வாகனங்களிலிருந்து இருக்கைகளின் அடிப்படையில் தலா ரூ 30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

  மேலும், பொதுமக்களிடமிருந்து அதிக கட்டணம் வசூல் செய்த கேரள பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து கண்டறியப்பட்டது.

  இப்பேருந்திலிருந்து வாகன வரியாக ரூ. 30 ஆயிரம் வசூல் செய்வதுடன் அனுமதிச்சீட்டு ரத்து செய்வது குறித்து போக்குவரத்து ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  வாகனச் சோதனையில் மேலும் 30 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்தால் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம் என்றும், ஆம்னி பேருந்து சோதனை தொடர்ந்து ஒருவாரம் நடைபெறும் எனவும் மார்த்தாண்டம் மற்றும் நாகர்கோவில் (பொறுப்பு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai