சுடச்சுட

    

    சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவுக்கு சனிக்கிழமை சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில், ஈத்தாமொழி, மேலகிருஷ்ணன்புதூரில் திமுக தலைவர் கருணாநிதியின் உருவபொம்மையை அதிமுகவினர் எரித்தனர்.

    மேலும், பிற்பகல் 3 மணிக்கு நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் அரசு விரைவுப் பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

    நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்டு வந்த நகரப் பேருந்துகளும் மாலை 4 மணிக்குப் பிறகு நிறுத்தப்பட்டன. நகரத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. மாலை 6 மணிக்கு நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

    பேச்சிப்பாறையில் மறியல்:  பேச்சிப்பாறையில் மறியலில் ஈடுபட்ட கட்சியின் நிர்வாகிகள் ராஜன், அல்போன்ஸ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

    கடையல்:  கடையல் சந்திப்பில் அதிமுக நகரச் செயலர் மணி தலைமையில், திமுக தலைவர் கருணாநிதியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. தொடர்ந்து, அப் பகுதி வழியே சென்ற 3 அரசுப் பேருந்துகளை அதிமுகவினர் சிறைப்பிடித்தனர். போலீஸார் சென்று பேருந்துகளை விடுவித்தனர்.

    மேல்புறம்: மேல்புறம் பகுதியில் ஒன்றியச் செயலர் கருணாகரன் தலைமையில் அதிமுகவினர் கடைகளை அடைக்க வலியுறுத்தினர். மேல்புறம், இளஞ்சிறை, கண்ணுமாமூடு ஆகிய பகுதிகளில் கருணாநிதியின் படத்தை எரித்தனர். இப்பகுதியிலும் சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    திருவட்டாறு: அதிமுக ஒன்றியச் செயலர் சுதர்சன் தலைமையில் திரண்டு வந்த அக்கட்சியினர், ஆற்றூர் சந்திப்பிலிருந்து நடந்து வந்து, குலசேகரம் வரையில் திறந்திருந்த கடைகளை அடைக்கச் செய்தனர்.

    களியக்காவிளை, மார்த்தாண்டத்தில் கருணாநிதியின் உருவபொம்மையை அதிமுகவினர் எரித்து கோஷமிட்டனர்.

    களியக்காவிளை:  களியக்காவிளையிலிருந்து கேரளப் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட அனைத்து கேரள அரசுப் பேருந்துகளும் பிற்பகல் ஒரு மணிமுதல் கேரள மாநிலப் பகுதியான இஞ்சிவிளை வரை வந்து திரும்பிச் சென்றன.

    பிற்பகல் 3 மணியளவில் களியக்காவிளை பேரூர் அதிமுக செயலர் ஜி. அருள்ராஜ் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் திரண்டு வந்து வலியுறுத்தியதையடுத்து, அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.

    மாலை 4 மணியளவில் கட்சி நிர்வாகிகள் அருள்ராஜ், நசீர் உள்ளிட்டோர் தலைமையில், களியக்காவிளை சந்திப்பில் கருணாநிதியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

    மார்த்தாண்டத்தில் கட்சியின் நகரச் செயலர் ராஜன், நிர்வாகிகள் நாஞ்சில் டொமினிக், கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் திரண்டு வந்து, உருவபொம்மையை எரித்தனர்.

    களியக்காவிளையில் - கன்னியாகுமரி, நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித் தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் ஒருசில மட்டுமே இயக்கப்பட்டன. கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் உள்பட பெரும்பாலான பேருந்துகள்  நிறுத்தப்பட்டன.

    கன்னியாகுமரி: சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர்.

    தக்கலை: தக்கலையில் குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு ஊர்வலமாக வந்து, தேசிய நெடுஞ்சாலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரின் உருவபொம்மைகளை எரித்தனர்.

    தக்கலை பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், தக்கலை, பத்மநாபபுரம், மேட்டுக்கடை, அழகியமண்டபம், முளகுமூடு, சாமியார்மடம், குமாரபுரம், முட்டைக்காடு, கொற்றிகோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன.

    மாலையில் தக்கலை பேருந்து நிலையத்துக்குள் அரசுப் பேருந்துகள் எதுவும் வரவில்லை. வெளி மாவட்டத்திலிருந்து வந்த பயணிகள் பேருந்து நிலையத்துக்கு வெளியே இறக்கிவிடப்பட்டதால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai