சுடச்சுட

  

  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாசனக் குளங்களை தூர்வாரி சீரமைத்து மகசூலை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  கேரள மாநிலத்திலிருந்து 1956இல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. அப்போது  வருவாய்த் துறையின் ஆவணங்களின்படி பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 2,500 குளங்களும், உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் 1,000 குளங்களும், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 500 குளங்களும், நிலவியல் மற்றும் தனியார் குளங்கள் என சுமார் 5ஆயிரம் குளங்கள் இருந்தன.

  இந்தக் குளங்களில் சுமார் 3,500 குளங்கள் உள்வரத்து கால்வாய் உடைந்தும், மடைகள் சேதமடைந்தும், புற்கள் வளர்ந்தும், மறுகால் உடைந்தும், பல குளங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டும் காணாமல் போய்விட்டன.

  தற்போது இம்மாவட்டத்தில் 1,500 குளங்கள் விவசாய பயன்பாட்டில் உள்ளன.

  இந்தக் குளங்களில் தேங்கியுள்ள கால்வாய் நீர் மற்றும் மழைநீரை பயன்படுத்தி விவசாயிகள் தென்னை, வாழை, நெல், மரவள்ளிக்கிழங்கு மற்றும் பயறுவகைகள் என 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து மகசூலை பெருக்கி வந்தனர்.

  இந்நிலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள குளங்களை பொதுப்பணித் துறையினரும், உள்ளாட்சித் துறையினரும் முறையாகப் பராமரிக்காததால் பாசிபடர்ந்தும், புற்கள் வளர்ந்தும் தூர்ந்தும், மடைகள் சேதமடைந்தும் வயல்போலக் காட்சியளிக்கின்றன.  வடகிழக்குப் பருவமழை தொடங்கிய இந்தச் சூழலில் குளங்களில் தண்ணீர் தேங்காமல் வீணாவது விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியளிக்கிறது.

  இதனால், இம்மாவட்டத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள குளங்களும் காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது.

  மேலும், குளங்களில் உள்ள பாசி மற்றும் வண்டல்களை வாரி அப்புறப்படுத்த விவசாயிகள், தன்னார்வ அமைப்புகள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தானாக முன் வந்தால் கனிமப்பொருள்கள் எனக் கூறி அதிகாரிகள் அதற்கும் தடை விதிக்கின்றனர்.

  இயற்கையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம். ஆனால் குளங்களைத் தூர்வாரி சீரமைக்க கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

  இதுகுறித்து மாவட்ட நீர்ப்பாசனத் துறை தலைவர் வழக்குரைஞர் வின்ஸ்ஆன்றோ கூறியதாவது: குளங்களை கனிம சுரங்கமாகக் கருதாமல் தூர்வாரி அப்புறப்படுத்தி வண்டல் மண்ணை விவசாயத்துக்குப் பயன்படுத்த அரசு அனுமதியளிக்க வேண்டும்.

  மத்திய, மாநில அரசுகள் நிதியின் மூலம் குளங்களைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai