குமரி மாவட்டத்தில் தொடர் மழை: அணைகள், பாசனக் கால்வாய்களில் ஆட்சியர் ஆய்வு
By DN | Published on : 24th October 2014 01:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து அணைகள் மற்றும் பாசனக் கால்வாய்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
குமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால் அணைகள் மற்றும் பாசனக் கால்வாய்களின் உறுதித் தன்மை குறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங்
ரா.சவாண் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முக்கடல் அணையிலிருந்து நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு
வருகிறது. இப்போது மழை பெய்து வருவதால் முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.
தெரிசனங்கோப்பில் அமைக்கப்பட்டுள்ள பாசனக் கால்வாய் மற்றும் பாலம், கல்குளம் வட்டம், சுருளோடு ஊராட்சிக்குள்பட்ட அனந்தனார் கால்வாய் மற்றும் பழையாறு
பிரியும் இடம், செல்லம்துருத்தி என்ற இடத்தில் உள்ள தோவாளை பாசனக் கால்வாய் பிரியும் இடம், பெருஞ்சாணி, பேச்சிப்பாறை அணைகள், சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2
ஆகிய அணைக்கட்டுப் பகுதிகள் மற்றும் பாசனக் கால்வாய் பகுதிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் நாவல்காடு பகுதிநேர நியாயவிலைக் கடை, பேச்சிப்பாறை அரசு தோட்டக்கலை பண்ணை ஆகியவற்றையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
ஆய்வின்போது பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவிப் பொறியாளர் வல்சன்போஸ், வட்டாட்சியர்கள் சுகிபிரேமலா, சிந்து, நாகேந்திரா, ஜெயன்
கிறிஸ்டிபாய் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.