சுடச்சுட

    

    பேச்சிப்பாறை அருகே மீட்கப்பட்ட யானைக் குட்டியை முதுமலை சரணாலயத்தில் சேர்க்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

    By DN  |   Published on : 27th October 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேச்சிப்பாறை அருகே காட்டிலிருந்து வழிதவறி வந்த யானைக்குட்டியை மீண்டும் அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படாததால் வனத்துறையினர்  குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் அந்த யானைக்குட்டியை முதுமலை சரணாலயத்தில் சேர்க்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    பேச்சிப்பாறை அருகே தொடலிக்காடு கீழ் சிற்றாறு பகுதியில் தாயிடமிருந்து தவறிய யானைக் குட்டியை வனத்துறையினர் வியாழக்கிழமை மீட்டனர். இந்த யானைக் குட்டியை வனத்துறையினர் தங்கள் கண்காணிப்பில் வைத்து பராமரித்து வருகின்றனர்.

    இந்த யானைக் குட்டியை மீண்டும் அதன் தாயுடன் சேர்க்கும் வகையில் வனத்துறையினர் இரண்டு அணிகளாக காட்டில் கடந்த மூன்று நாள்களாக தேடுதல் நடத்தி வருகின்றனர். ஆனால் யானைக்குட்டியின் தாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

    மேலும், யானைக்குட்டியை மீட்ட இடத்தில் கூண்டு போன்ற அரண் அமைத்து அதில் யானைக்குட்டியை விட்டுவிடுவது குறித்தும் வனத்துறையினர் திட்டமிட்டு பணிகளைச் செய்தனர்.

    இதில், வேறு விலங்குகளால் யானைக்குட்டிக்கு ஆபத்து நேரிடக் கூடிய வாய்ப்பும் உள்ளதால், அந்தத் திட்டத்தையும் செயல்படுத்த வனத்துறையினர் இப்போது தயக்கம் காட்டுகின்றனர். மேலும், மனிதர்களின் அருகில் நடமாடிய யானைக்குட்டியை காட்டில் விடும்போது அதன் தாய் ஏற்றுக் கொள்ளுமா என்பதிலும் குழப்பம் உள்ளது.

    மோசமாகும் உடல்நிலை: இப்போது யானைக்குட்டிக்கு கால்நடை மருத்துவர்களின் பரிந்துரைப்படி புட்டிப்பால் உள்ளிட்ட திரவ உணவுகள் கொடுக்கப்படுகிறது.

     எனினும் யானைக் குட்டியின் உடல்நிலை மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினர் யானைக்குட்டி தொடர்பாக எந்த முடிவு எடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் ஆர்.எஸ். லால்மோகன் கூறியதாவது: தீபாவளி நேரத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெடி சப்தம் காரணமாக யானையிடமிருந்து அதன் குட்டி பிரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இப்போதுள்ள நிலையில் வனத்துறையினர் தொடர்ந்து யானைக்குட்டியை பராமரிக்க முடியாது. அவ்வாறு செய்தால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

    எனவே இந்த யானைக் குட்டியை விரைந்து முதுமலை யானைகள் சரணாலயத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். அங்கு திறமையான மருத்துவர்கள் மற்றும் யானைகளின் குணங்கள், செயல்பாடுகளை அறிந்தவர்கள் இந்த யானைக்குட்டியை காப்பாற்றிவிடுவர் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai