பள்ளியாடி அருகே சரக்கு ரயில் என்ஜின் பழுது: ரயில் சேவை பாதிப்பு
By DN | Published on : 29th October 2014 12:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே சரக்கு ரயில் என்ஜின் செவ்வாய்க்கிழமை பழுதாகி நின்றதால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக திருநெல்வேலிக்கு சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் காலை 7 மணிக்கு பள்ளியாடி வந்தபோது திடீரென என்ஜின் பழுதானது. தகவல் அறிந்ததும் ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதனால் அந்த வழியாக நாகர்கோவிலிலிருந்து புறப்பட்ட ரயில்களும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்குப் புறப்பட்ட ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
பின்னர் நாகர்கோவிலிலிருந்து மற்றொரு என்ஜின் கொண்டு செல்லப்பட்டு சரக்கு ரயில் பின்நோக்கி மார்த்தாண்டத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகே ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.