Enable Javscript for better performance
மார்த்தாண்டம் அருகே கிணற்றிலிருந்து சிலைகள் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    மார்த்தாண்டம் அருகே தங்கும் விடுதி கிணற்றில் தூர்வாரும் போது, கிணற்றிலிருந்து கணபதி சிலைகள், தட்டு போன்றவை மீட்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் சுகுமாரன் என்பவருக்குச் சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இங்குள்ள 40 அடி ஆழ கிணறு பாழடைந்து கிடந்ததாம். இதையடுத்து செவ்வாய்க்கிழமை களியக்காவிளை அருகேயுள்ள கூட்டப்புளி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் தலைமையில் 4 பேர் கிணற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிணற்றிலிருந்து ஒன்றரை அடி உயரமுள்ள இரு கணபதி சிலைகள், 2 தட்டுகள், ஒரு சக்கரம் உள்ளிட்ட பொருள்கள் கிடந்தது. இவற்றை விடுதி உரிமையாளரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். விடுதி கிணற்றிலிருந்து பஞ்சலோக சிலைகள் மீட்கப்பட்டதாக அப்பகுதியில் தகவல் பரவியதையடுத்து அங்கு ஏராளமானோர் குவிந்தனர்.

    இதைத் தொடர்ந்து விடுதி நிர்வாகத்திடமிருந்து மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸார் அங்கு சென்று கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பொருள்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பொருள்களை மார்த்தாண்டம் பகுதி நகைக்கடைகளில் கொண்டு சென்று சோதனை செய்தனர். இதில் கணபதி சிலைகள் அலாய் உலோகம் மூலம் செய்யப்பட்டது என்றும், தட்டுகள், சக்கரம் போன்றவை பித்தளையால் ஆனது என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து இப்பொருள்களை போலீஸார் மீட்டு விளவங்கோடு வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai